மகளிடம் பேச முடியாமல் தடுமாறும் கூலிக்கொலைக்கார தந்தையின் மனப்போராட்டம்! - ஃபிரைடே கில்லர்
பிரைடே கில்லர் 2011
Director: Yuthlert Sippapak
Actors: Anna Chuancheun, Apinya Sakuljaroensuk, Chumphorn Thepphithak, Jaran 'See Tao' Petcharoen, Kowit Wattanakul, Ploy Jindachote, Suthep Pongam
Country: Thailand
வெள்ளிக்கிழமை மட்டும் பிறரை திட்டம் போட்டு கொல்லும் கொலைகாரன். சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறான். வந்தவுடன் அவனுக்கு சிகரெட் கொடுத்து புகைக்க சொல்லுகிறான் ஒருவன். அவனை விடுதலையானவன் பார்த்ததே கிடையாது. அவன் யாரென்று கேட்கும்போது, திடீரென கத்தியால் அவனைக் குத்திவிட்டு ஓடிவிடுகிறான்.
கீழே ரத்தசகதியில் கிடப்பவனை காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவள் காப்பாற்றுகிறாள். அவனுக்கு தன் அம்மா எழுதிக்கொடுத்த கடிதத்தை கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். அக்கடிதத்தைப் படிப்பவன், ஆவேசம் அடைகிறான். ஆனால் மீண்டும் அந்த கடிதத்தைப் படித்துவிட்டு தன்னை மருத்துவமனையில் சேர்த்த பெண்ணைப் பார்க்கச் செல்கிறான். அங்கு நேரும் ஒரு அசம்பாவித நிகழ்ச்சியை அவன் தன்னுணர்வின்றி தடுக்க நினைக்க, அது அவன் மேல் வீண்பழியாக விழுகிறது. இதனால் அவனை மருத்துவமனையில் காப்பாற்றிய பெண் அவனைக் கொல்ல துப்பாக்கியுடன் துரத்துகிறாள்.
உண்மையில் சிறையிலிருந்து விடுதலையான கழுகுப்பார்வை என்ற மனிதன் யார்? அவனுக்கு வந்த கடிதத்தில் உள்ள சமாச்சாரம் என்ன? அவனைக் கொதத் துரத்தும் அந்த பெண் யார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள கட்டாயம் நீங்கள் பிரைடே கில்லர் படத்தைப் பார்க்கவேண்டும்.
படம் ஹாலிவுட் படங்களைப் போல ஆறாவது விரலாக துப்பாக்கியை யாரும் பயன்படுத்தும் ரகமில்லை. படம், உறவுகள், உணர்ச்சிகள், வன்மம், அவல நகைச்சுவை என கதம்பமாக உள்ளது.தைரியமாக லெஸ்பியன் விஷயங்களை பேசியது முக்கியமான விஷயம்.
நாயக பிம்பமே இங்கு உருக்குலைந்துதான் கிடக்கிறது. பின்னே, கழுகுப்பார்வை எனும் கோ வூசி யின் முகத்திலயே பைத்தியக்காரன் எச்சிலைக் காரி துப்புகிறான். ஆனால் அதற்கு பதிலுக்கு கோவூசி எதுவும் கூறுவதில்லை.
படத்தின் முக்கியமான மையமே கடிதம்தான். அதிலுள்ள விஷயம்தான் கோவூசியின் மனதை மாற்றுகிறது. கடைசிக் காட்சியில் கூட பலரும் யோசிக்கலாம். படத்தை நல்லவிதமாகவே முடித்திருக்கலாம் என. ஆனால் கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வாக்கியங்களை சரியாக உங்களால் நினைவுகூர முடிந்தால் நிச்சயம் முடிவை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். உண்மையில் நிஜ வாழ்க்கையில் சுபமான முடிவுதான் கிடைக்கிறதா என்ன?
மனதை உலுக்குகிறான் பிரைடே கில்லர்
கோமாளிமேடை டீம்
https://www.youtube.com/watch?v=KToHeGQk2cA
கருத்துகள்
கருத்துரையிடுக