ரஷ்யாவின் ராணுவ அணிவகுப்பு!
தில் ரஷ்யா! திகிலில் உலகம்!- ரோனி
தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா
அனைத்து நாடுகளுக்கும் அட்வைஸ் செய்யும் நம்பர் 1 வஸ்தாதுவாக மாறியது. உலகநாடுகளை வளைத்து
டஜன் கணக்கிலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யாமீது விதித்த அமெரிக்கா, தன்னை மிஞ்சி வளராதபடி
பார்த்துக்கொண்டது. ஆனால் ரஷ்யா சும்மாவா இருக்கும்?
எண்ணெய் விலை வீழ்ந்ததில் தடுமாறிய ரஷ்யா, புதின் அதிபரானபின்
உறுதியான நாடாகியது. அமெரிக்க தேர்தலில் குறுக்கீடு, உக்ரைன்மீது சைபர் தாக்குதல்,
சிரியாவுக்கு ஆதரவு, இங்கிலாந்தில் முன்னாள் உளவாளிகள் மீது நச்சுத்தாக்குதல் என ரஷ்யாவின்
ஆக்சன்கள் அனைத்தும் அதகள அதிரடிகளாயின. கெட்டப்பையன் இமேஜை மாற்றி பொருளாதார பலத்தை
நிரூபிக்க ஃபிபா கால்பந்து போட்டியை நடத்தி லட்சியத்தில் மாஸாக வென்றது. இருந்தாலும்
வெளியுலகிற்கு தன்னை புஜபல பீமனாக நிரூபிக்க என்ன தேவை? ராணுவம்தானே!
அண்மையில் 3 லட்சம் படைவீரர்கள், 36 ஆயிரம் கவசவாகனங்கள், 1000
விமானங்கள் (ட்ரான்கள்,ஹெலிகாப்டர்கள்), 80 கப்பல்கள் என கிழக்கு சைபீரியாவில் ராணுவ
டிரில்லை ரஷ்யா தொடங்கியுள்ளது. வோஸ்டாக் -2018 எனும் பெயரிலான பயிற்சி சோவியத் யூனியன்
1981 ஆம் ஆண்டு நடத்திய ஜபாத்-81 ராணுவப்பயிற்சியை நினைவூட்டுவதாக அரசியல் வல்லுநர்கள்
கூறுகின்றனர்.
“எங்களுடைய ராணுவப்பயிற்சி எதிர்காலத்தில் ஏற்படும் போரினை சமாளிப்பதற்கு
உதவும்” என மார்தட்டியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சொய்கு. அணுஆயுதங்களை
தாங்கிச்செல்லும் இஸ்காண்டர் ஏவுகணைகள், டி-80, டி-90 டாங்கிகள், சூ-34, சூ-35 போர்விமானங்கள்
இப்பயிற்சியில் புதிய வரவுகள். பயிற்சி நடைபெறும் 9.8 மில்லியன் ச.கி.மீ தூரத்திற்கு
தகவல்தொடர்பையும் விரிவாக்கி பாதுகாப்பையும் இறுக்கியுள்ளது ரஷ்ய உளவுத்துறை.
ரஷ்யாவின் தில்லான ராணுவ பயிற்சிகளை பார்த்தால் உலகநாடுகளுடன்
முட்டி மோதப்போகிறது என நினைப்பீர்கள்; முதல் எதிரியான அமெரிக்காவுடன் இணையும் நாடுகளுடன்தான்
சண்டை என வெளிப்படையாகவே போர் நோக்கத்தை ரஷ்யா அறிவித்துவிட்டது. இப்பயிற்சிக்கான தொடக்கவிழாவில்
சீன அதிபர் ஜிங்பிங் கலந்துகொள்வதும் சீன, மங்கோலிய வீரர்கள் ரஷ்யாவுடன் ராணுவப்பயிற்சியில
பங்கேற்பதும், அதேநேரத்தில் உக்ரைனில் நேட்டோ படைகளின் பயிற்சி நடைபெறுவதும் தற்செயலானது
என நாங்கள் கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?