விபத்துகளை குறைக்குமா ஏஐ கார்?
விபத்துகளைக் குறைக்குமா ஏஐ கார்கள்?
உலகில் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நடைபெறும் விபத்துகளின்
எண்ணிக்கை 12.5 லட்சம். போர், கொலை நிகழ்வுகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இது
அதிகம் என்கிறது போர்ப்ஸ் இதழ்.
விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைக்க அரசு எடுக்கும்
நடவடிக்கைகளை விட இதற்கு தீர்வுகளைத் தேடும் டெக் நிறுவனங்களின் லட்சிய வேகம் அதிகம்.
அப்படிப்பட்ட ஐடியாக்களில் ஒன்றுதான் தானியங்கி கார்கள். கேமராக்கள், சென்சார் மற்றும்
ஏஐ(செயற்கை நுண்ணறிவு) மூலமாக தானியங்கி கார்களை இயக்கும் சோதனைகளை மைக்ரோசாஃப்ட்,
ஆப்பிள், கூகுள், பைடு, உபர், டொயோட்டோ ஆகிய முன்னணி நிறுவனங்களோடு பல்வேறு சிறுகுறு
நிறுவனங்களும் கைகோர்த்து பல்லாண்டுகளாக செய்து வருகின்றன.
தூக்கம், பகல்கனவு, விதிகளைப் மதிக்காததால் வண்டியின் ஓட்டுநர்
மட்டுமல்லாது பயணிகளும் விபத்தில் பலியாவதற்கு தீர்வு, ஏஐ கார்கள்தான். தானியங்கி கார்களிலுள்ள
சென்சார்கள் மூலம் முன்னேயுள்ள கார், சாலையைக் கடக்கும் பாதசாரிகள், சிக்னல் என அனைத்தையும்
கண்காணித்து இயங்குவதால் எதிர்காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவது உறுதி. டிஜிட்டல்
ட்ரைவர் என்பதால் போக்குவரத்து விதிகளை உடனே அமுல்படுத்த முடியும் என்பதோடு டாக்சி
வாடகையும் குறையும். வேலையிழப்பு, வைரஸ் தாக்குதல் என மைனஸ் பக்கங்கள் இருந்தாலும்
டெக் வளர்ச்சியில் அவையும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே.
அமேஸான் அலெக்ஸா, கூகுள் ஹோம் என டிஜிட்டல் உதவியாளர்கள் வீட்டிலுள்ள
அனைத்தையும் இணைத்து கட்டுப்படுத்தி உதவுவது டெக்னாலஜி(IOT) மூலம்தானே சாத்தியமானது?
பிளாக்பெர்ரி சீன டெக் நிறுவனமான பைடுவுடனும், டொயொட்டா உபருடன் இணைந்தும், போஸ்ச்
டெய்ம்லருடன் இணைந்தும் தானியங்கி வாகனங்களை வணிகமயப்படுத்தும் சோதனைகளை நடத்தி வருகின்றது.
ஆதார் கார்டு, எப்படி அனைத்து ஒருவரின் தகவல்களை இணைத்த அரசு ஆவணமாக பல்வேறு விமர்சனங்களுடன்
ஏற்கப்பட்டதோ அதேபோல இனி இணையத்துடன் இணைக்கப்பட்டதாகவே நமது அன்றாட பணிகளும்(உணவு,
பணி, போக்குவரத்து, பொழுதுபோக்கு) இஷ்டமோ, கஷ்டமோ அமையப்போகிறது. தொழில்நுட்பத்தின்
சர்வாதிகாரம் என நாம் புலம்பினாலும் 2030 ஆம் ஆண்டில் உலகெங்கும் 15 சதவிகித தானியங்கி
கார்கள் ஓடத்தொடங்கியிருக்கும் என்கிறது ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி.