அணைநீரில் சோலார் மின்சாரம்!
மின்சாரம் தயாரிக்க புதுமையான ஐடியா!
தமிழ்நாட்டின் மின் விநியோக நிறுவனமான டான்ஜெட்கோ(TANGEDCO) தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் சோலார் பேனல்களை நிறுவ உள்ளது.
நிலம் இருக்க நீர் எதற்கு?
சோலார் பேனல்களை நிலத்திலேயே நிறுவலாமே என்று நினைப்பீர்கள். இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவது, வாடகை என செலவு எகிறுவதால் டான்ஜெட்கோ இந்த முடிவை எடுத்துள்ளது. நிலத்தை விட நீரில் வெப்பத்தைப் பெற்று மின்சாரம் தயாரிப்பது எளிது.
தமிழ்நாட்டிலுள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி சாகர் அணை ஆகியவற்றில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக பெருமளவில் சோலார் பேனல்களை டான்ஜெட்கோ நிறுவுவதற்கான முயற்சிகளைத் தொடங்கி உள்ளது. மொத்தம் 250 மெகாவாட் மின்சாரத்திற்கான திட்டம் இது.
புதிய திட்டங்கள் தேவை!
இந்தியாவில் முதன்முறையாக அணைநீரில் பிரமாண்ட அளவில் சோலார்பேனல்களை நிறுவி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு, ரிகாந்த் அணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் 50 மெகாவாட் மின்சாரத்தை தனியார் நிறுவனம் யூனிட் ஒன்றுக்கு 3.29 ரூபாய்க்கு விற்கிறது.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் நுழைந்து 33 ஆண்டுகளாகின்றன.
”புதிய திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதற்கான வேகம் தேவைப்படுகிறது. காற்றாலைகள் மூலம் தமிழகம் மட்டுமே 2 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து அளித்துள்ளது” என்கிறார் இந்திய அரசின் இயற்கை மற்றும் புதுப்பிக்கும் துறை சார்ந்த அமைச்சக செயலர் பிரவீன் குமார். விரைவில் இந்திய அரசு வெளியிடும் புதுப்பிக்கும் ஆற்றல் சார்ந்த திட்டத்தில் சோலார்பேனல்களைப் பயன்படுத்துவோருக்கு எளிய கடன் உதவிகளை வழங்கும் யோசனையும் உள்ளது. கேரளாவின் வயநாட்டிலுள்ள பனாசுரா அணையில் 500 கி.வாட் மின்சாரத்தை தயாரிக்கும் வகையில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
முன்னணியில் சீனா!
சீனா, புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சாரத் தயாரிப்பின் பங்கை 30 சதவீதமாக மாற்ற முயற்சித்து வருகிறது. இத்துறையில் 361 பில்லியன் டாலர்களை செலவழிக்க உள்ளது சீனா. இங்கிலாந்து, 2016 ஆம் ஆண்டு ஹீத்ரு விமானநிலையம் அருகே 23 ஆயிரம் சோலார்பேனல்களை ஆற்று நீர் மீது அமைத்தது.
பயன்கள் அதிகம் இருந்தாலும் நீரில் சோலார்பேனல்களை அமைக்கும் இத்திட்டம் நிலத்தில் அவற்றை அமைப்பதைவிட 20 சதவீதம் அதிகச் செலவு பிடிக்கக் கூடியது. சோலார் பேனலின் வாட் சக்திக்கு ஏற்ப விலை கூடும். வீட்டில் நிறுவும் 250 வாட் சோலார் பேனலின் தோராய விலை 187.
டான்ஜெட்கோவின் திட்டம் சரி என்றாலும், பெரும் நிறுவனங்கள் இதில் பங்கேற்ற தயங்குகின்றன. அரசு நிறுவனமான டான்ஜெட்கோ, தனியார் மின்சார நிறுவனங்களுக்கு தராமல் வைத்திருக்கும் நிலுவைத்தொகைதான் காரணம். புதுப்பிக்கும் ஆற்றல்துறையில் தெளிவான கொள்கைகள் புதுப்பிக்கும் ஆற்றல்துறையை வளர்க்கும்.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர் பட்டம்