கஞ்சா புகையில் சோதனை சினிமா - சிம்பா கதை என்ன?
சிம்பா(தமிழ்)
அர்விந்த் ஸ்ரீதர்
விஷால் சந்திரசேகர்
சினு சித்தார்த்
தாத்தா இறந்த சோகத்தில் போதையில் மூழ்கி கிடக்கும் பரத்திற்கு (மகேஷ்)மாற்றம் கிடைப்பது, பக்கத்துவிட்டு விவாகரத்தான பெண் மது மூலம். நமக்கு உதவி செய்வது பெண்ணாக இருந்தால், என்ன வரும்? யெஸ் லவ்தான். இரண்டாம் உலகில் எப்போது ட்ராவல் செய்யும் பரத்திற்கு உலகில் என்ன நடக்கிறது என்பதே போதை தெளியும்போதுதான் தெரியும்.
இந்த லட்சணத்தில் காதல் கைகூடியதா? என்ன பிரச்னைகளை சந்தித்தார் என்பதே கதை. எக்ஸ்பரிமெண்டான கதை. உண்மையில் ஹீரோதான் எல்எஸ்டி, கஞ்சா அடித்திருக்கிறாரா இல்லை நாமே அப்படித்தான் இருக்கிறோமா என கிள்ளிப்பார்த்து படம் பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில் கேமராமேன் சினு சித்தார்த் பாஸ் ஆகிவிடுகிறார்.
சிம்பா யாரு? தமிழகத்தின் நம்பர்1 காமெடியாக முயற்சிக்கும் பிரேம்ஜிதான். வேற யாரு? படத்தின் ஹீரோ சத்தியமாக பரத் என்றால் டைரக்டரே நம்பமாட்டார். அந்தளவு பிரேம்ஜியின் ஒன்லைனர்கள், நக்கல் படம் முழுக்க நம்மை காப்பாற்றுகிறது. அதுவும் பரத் பிலாசபியில் முழுகி அந்தப் பூச்சி எனக்கு கதை சொல்லுச்சு என சொல்லும்போது பிரேம்ஜி காட்டும் ரியாக்ஷன்கள் வாரே வாவ்.
நாயின் அன்பைச் சொல்லும் படம் என வைத்துக்கொள்ளலாம். மற்றபடி படத்தில் ட்விஸ்ட் என ஏதுமில்லை. ஸ்வாதி தீக்சித்தின் ஐட்டம் டான்ஸ் கொஞ்சம் மனசை ஆறுதல் படுத்துகிறது. அவ்வளவுதான். பஞ்சாப் பாசந்தி பானு ஸ்ரீமெஹ்ரா யூ சர்டிபிகேட் பிகர். அவரிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.
சிம்பா கடைசியாக என்னதான் சொல்ல வருகிறது? நாட்டு நாயோ, கிரேட் டேனோ கொஞ்சநாளும் நேசமுடன் பழகுங்கள். வாழ்க்கை நல்லாயிருக்கும். கல்யாணம் கூட தேவையில்லை. இப்படியே படத்தை புரிஞ்சுக்கோங்க. அதுதான் நமக்கும் நல்லது. இல்லேன்னா சிம்பா கடிச்சு வெச்சுருவான்.
- கோமாளிமேடை டீம்.
நன்றி: சேதுமாதவன் பாலாஜி