லவ் இன்ஃபினிட்டி: காதல் கனவு நிறைந்த மனது
25
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: சரசா, தீரன் குமார்.
ஆண்டவனின் அருள்தான் என்று சொல்லவேண்டும். அப்போது என்றோ அனுப்பிய இமெயிலுக்கு கதிர் பத்திரிகையிலிருந்து அழைத்தார்கள். அழைத்தவர் பெயர் கண்ணன். அன்று அடைந்த சந்தோஷத்தை பின்னொரு நாளில் அடைவேனா என்றளவு சந்தோஷப்பட்டேன்.
இத்தனைக்கும் நான் காக்கை அமைப்பில் மொழிபெயர்த்திருந்தது ஒரே ஒரு நூல்தான். அதற்கும் இரண்டாயிரம் ரூபாயைத் தாண்டி வேறு எதுவும் தரவில்லை. அங்கு வேலை செய்ததற்கு அதுவும் சரியாக போனால் எனக்கு என்ன மிஞ்சும்?
இதைப்பற்றியெல்லாம் கவிக்குமாரும் கவலைப்படவில்லை. நூறு பர்சென்ட் கலைஞன் பாபுவும் யோசிக்கவில்லை. என்னைப் பற்றி யோசித்து உருப்படுவானா என்று யோசித்தது மூன்று பேர்தான். என்னை பெத்தவர்கள், அடுத்து பிருந்தா. சோத்துக்கே சாகிறப்போ இவ வேற என எரிச்சல் மூலாதாரத்திலிருந்து முட்டிக்கொண்டு கிளம்பியது. ஆனால் இந்த பிரியத்தை உரிமையை கோபத்தை நீ காதலித்த ஒரு பெண்ணிடமாவது பார்த்தாயா என மனசாட்சி கேள்வி கேட்டது.
எப்படியோ, 120 ரூபாயைத் தேற்றி சென்னை வந்து சேர்ந்தேன். பத்திரிகை உலகை உய்விக்க சூரியன் வந்துவிட்டான் என்ற மிதப்பு தெளுவில் சுண்ணாம்பு உரைப்பு போல சுள்ளென இருந்தது. ஆனால் எதற்கும் அங்கே வேலையில்லை. ஆசிரியர் கர்ணன், முடிந்தளவு தள்ளி நின்றே பேசினார். நிறைய கேள்விகள் கேட்டார். புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். சாதி என்ன என நாசூக்காக அப்பா என்ன செய்றார் என்று கேட்டார்.
மரம் ஏறுறவருங்க என்றேன்.
ரைட். எப்போ வந்து சேருரீங்க. முடிஞ்சவரை சீக்கிரம் என்றவர்
வேலையில் ஆழ்ந்துவிட்டார்.
2
தங்குவதற்கு பிரச்னையில்லை. காரணம், சென்னிமலை அருளானந்தம் அங்கு டிசைனராக இருந்தார். தம்பீ என அழைத்து பாசமோடு வடை வாங்கி கொடுத்து சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
எனக்குத் தெரிந்து பார்த்தவுடனே ஒருவனின் கண்கள் வழியாக மனதை ஊடுருவிப் பார்த்து பேசும் இவரின் டேலன்டை எங்குமே பார்த்ததில்லை. இவரிடம் எப்படி பேசுவது என இன்றுவரை நான் கற்றுக்கொள்ளவில்லை. நாம் மனதில் நினைத்துள்ள விஷயங்களை தெரிந்துகொண்டு அதற்கு பதில் சொன்னால் அந்த மனுஷனிடம் எப்படிப் பேசுவது?
வேலையில் சேர்ந்துவிட்டேன். நான் செய்த தப்பு உடனே கண்ணுக்கு தெரிந்துவிட்டது. நிறைய வேலைகளை மெல்ல கர்ணன் தலையில் கட்டினார். காரணம், அங்குள்ள யாரையும் அவர் நம்பவில்லை. வேலைகள் செய்ய அவர் நம்பியது ரிப்போர்டர் சிவனையும், கண்ணனையும்தான். மற்றவர்களை முடிந்தளவு ஊதாசீனப்படுத்துவதும், உதறுவதுமாக இருந்தார். வேலைகளை யாருக்கும் சொல்லித்தரும் திறமை கொண்டவர் அல்ல. ஆனால் குறைகளை நிறைய சொல்வார்.
ஆனால் என்ன செய்வது? எடிட்டர்.
வேலை முடிந்து வீட்டுக்குப் போக மணி ஒன்பது ஆகிவிடும். பாழாய்போன பஸ் 12 ஜி ஆடி அசைந்து அண்ணாமலையார் கோயில் யானை போல வந்து நின்றால், கூட்டம் தேன்பூச்சி போல ஒட்டிக்கொண்டிருக்கும். வேண்டாம் என உட்கார்ந்து போலாம் என்றால் நின்று கொண்டே செல்லத்தான் எனக்கு தலையில் எழுதியிருந்தது. இந்த நேரத்தில் திடீரென அதிகாலையில் நாலு மணிக்கு அப்பன் கூப்பிட்டார்.
சொல்லுங்கப்பா?
டேய் தம்பி, ஆத்தாவுக்கு ஒடம்பு நலுக்கமா இருக்கு! சட்டுன்னு வண்டியப் புடிச்சு வா.
ஐயோ, இப்பவா, லீவு குடுப்பாங்களான்னு தெரியலீங்கப்பா
ஏண்டா, ஆத்தா ஒடம்பு சரியிலீங்கறன். நீ என்னடா காரணஞ் சொல்லிக்கிட்டிருக்க. மரியாதையா வா.
என்ன இது. ஆத்தா ஒடம்பு சரியீல்லிங்கறதுக்கு எம்மேல ஏ இந்த கோபம் எனக்கு ஒண்ணுமே புரியலைதான்.
உடனே கிளம்பி அருள் அண்ணனிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது மணி 5. 17டி டீலக்ஸ் வந்தது. நிறுத்தவெல்லாம் இல்லை. மொட்டப்பனங்காடு கருப்பணசாமி காப்பாத்துன்னு சொல்லி தாவி ஏறினேன். டிரைவருக்கு அப்படி ஒரு சிரிப்பு. நமக்கு உசுரு ஆச்சே.
காலையில் ட்ரெயினில் கிளம்பும்போது எடிட்டருக்கு போன் செய்து மேட்டரை சொல்லிவிட்டேன். நான் சொன்ன மேட்டரு முன்னமே எழுதிட்டீங்க இல்ல ரைட் நான் பாத்துக்கிறேன் என பொறுப்பாக அவரே போனை வைத்து விட்டார். வாட் எ மேன்!
2
ஈரோட்டில் இறங்கின உடனே பஸ் கிடைக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் அரச்சலூர், அல்லது வெள்ளக்கோவில் வண்டிதான பிடிக்கவேண்டும். கரூருக்கு போக வேண்டிய வண்டியைப் பிடித்து ஏறுவது கடினம். அதிலும் நின்று கொண்டேதான் போகவேண்டும். கரூர்காரன்கள் உட்கார்ந்த பின்னரே நாம் உட்காரவேண்டும். அதாவது இடம் இருந்தால், சீட் தென்பட்டால்.
எனவே சந்தேகமே வேண்டாம் நின்றுகொண்டேதான் போகவேண்டும். எனக்கு ஆத்தா உடம்பு நலம்பெறுவதில் பெரிய அக்கறை கிடையாது. ஏதாவது பணம் வெச்சிருந்தால் நல்லாருக்கும்போதே பிடிங்கிவிடலாம் என நைச்சியமாக பேசி வந்தேன். ஆனால் காரியக்கிழவி ஆச்சே. என் ராஜதந்திரங்கள் அனைத்தும் தோற்றுப்போயின.
அதற்குள் உடம்புக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, பச்சைப் பெட்டியில் இருக்கிறத நானே எடுத்துக்கலாமா என்ற உரிமைப் பிரச்னைகளை நினைத்துக்கொண்டே வந்தேன். திடீரென உடம்பு நலிந்து பின் சரியாவது ஆத்தாவுக்கு இது எத்தனையாவது முறை.? கணக்கே மறந்துவிட்டது. அப்படி கண்டது கடியது என அத்தனை கறியையும் சாப்பிட்டு வளர்ந்த பாடி அது. முடியுமா? எமன்கிட்டேயே டாஸ் போட்டு பார்த்து விளையாடுவாள் அவள்.
ஆனால் அப்பன் சொன்னதில் உடனே வா என்பதுதான் உறுத்தலாக இருந்தது. எம்பிஎம்எஸ் நேர்வழி வர பஸ்ஸில் தொற்றினேன். மூன்று ஸ்டாப்புகள் கடந்து சோலாரில் உட்கார இடம் கிடைத்தது. எப்படி ஆக்சிலேட்டரை மிதித்தாலும் 45 நிமிஷம் என்ற கணக்கு ஆகிவிடும்
இந்த நேரத்தில் பிருந்தா மேட்டர் வீட்டுக்கு தெரிந்துவிட்டதோ என்ற பயம் வேறு உள்ளே முளைவிட்டது. ஆகா தெரிஞ்சா, ஆன் தி ஸ்பாட் மூத்திரத்தை கொட்ட வெச்சிருவாங்களே. காதல், கல்யாணத்தைக் கூட விடுங்க. அப்பனோடு பராத்து கையில அடிவாங்கிறதைத்தான் தாங்கிக்கவே முடியாது. ஒருமுறை வீட்டுக்கு வராமல் சாயந்திரம் கிரிக்கெட் விளையாடினேன்னு கூட்டிட்டு வந்து வாசலில் ரப்புன்னு ஒண்ணு செவினில வுட்டாரு பாருங்க அடி. கண்ணாடி கிருட்டு கிருட்டுனு போயி சலதாரையில வுழுந்துருச்சு. பதட்டத்துல தரையில தேடினேன். ஈஸ்வரண்ணன்தான் கண்ணாடிய அங்கிருந்து எடுத்துக் குடுத்தாரு.
பொறி கலங்கி அண்டமே அதிர்ந்து போச்சுன்னா அது அந்த மொமண்ட்தான்.
வீட்டுக்குப் போய் தாளைத் திறந்தேன். ஜீன் எப்போதும்போல பாசத்துடன் மேலே தாவி ஜீன்ஸ்பேண்டையும் மண் ஆக்கினான். மூஞ்சியில் முகர்ந்து பார்த்து நக்க என்ன ஒரு துணிகர முயற்சி. சரியான கணத்தில் அதைத் தடுத்தேன். டெட்டாலை விட நம் கைகள் சக்தி வாய்ந்தவை என்பதை நம்புகிறவன் நான். வைரஸ், பாக்டீரியாவை சிம்பிளா செலவில்லாம தடுத்தேன் பார்த்தீர்களா?
ஆனால் அப்பன் அதையெல்லாம் பாராட்டவில்லை.
ஏண்டா, வீட்டுக்கு அந்த செவத்த புள்ளைய கூட்டிட்டு வந்தியே என்னாச்சு?
அந்தப்புள்ள தவறிருச்சுங்பா.
ஏண்டா? நீ லவ் லெட்டர் குடுத்ததுக்கா?
அப்பா..
செரி, அரச்சலூர்ல உம் மாமன் பொண்ணுக்கூட ஏதாவது கசமுசா நடந்துதா?
என்னப்பா இப்படிக் கேட்கறீங்க?
அவங்கப்பன் இங்க வந்து அப்படிப் பேசறான். ஈரோட்டுக்கு போறன்னு நீ பார்த்த வேலை இதுதான் இல்லையா? புள்ளைய கல்யாணம் பண்ணிக்கச்சொல்றான். என்ன பண்றே?
பொண்ணு ஒத்துக்கிச்சாப்பா
அத நீதே போனு போட்டு கேட்டுச் சொல்லணும். ஏண்டா எல்லா வேலையும் பாத்துப்புட்டு பச்சக்குழந்தை மாதிரி நிக்கிறே?
அப்போதுதான் ஆயா, எந்திரிச்சு வந்தது .
அதெல்லாம் அவுங்க அம்மா வூட்டற பாடம். என்கிட்ட எப்பவாது பேசியிருக்கிறானா, முணுக் முணுக்குன்னு அவகிட்டயே பேசிக்கிட்டிருந்துட்டு ஓடிரூவான் என பேச அப்பாவுக்கு கண்ணில் சிவப்பு ஏறியது.
உன்ன இப்படியே உட்டா நீ பொண்ணுகள கூட்டிட்டு வந்து அணிவகுப்புதா நடத்துவ. அந்த பொண்ணு உன்னத்தா விரும்பறன்னு சொல்லுதான். கொஞ்சம் செவத்த புள்ளையா பாத்திருக்கலாம். பேரப்புள்ளனாலு பளிச்சுன்னு பொறக்கும்.
குங்குமப்பூ சாப்பிட்ட கொழந்த செவப்பா பொறக்கும்பா?
அப்படியே அதை அப்ப உங்காசுல வாங்கி வரப்போற உம் பொண்டாட்டி வாயில ஊட்டு.
என்றவர், வெள்ளைச்சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டார்.
அப்புறம் என்ன? சொந்தக்காரி வேற. மூச் காட்ட முடியலை. கல்யாணம், சடங்குன்னு எனக்கு பீதியானாலும் பிருந்தாவுக்கு சாதிச்ச திருப்தி.
சொந்தக்காரங்க புதுசா வரும்போது முழங்கையில நங்குன்னு விலாவுல குத்தி அறிமுகப்படுத்தினா.
சொந்தம் தெரியாம இருக்கீங்க?
ங்க சேத்தறத்துக்காக நான் எலும்பை பறிகொடுக்க முடியாது.
இல்ல இனி அப்படித்தான் கூப்பிடுவேன். வீட்டுல அப்படித்தான் சொன்னாங்க.
வீட்டுல சொல்றதைக் கேட்ட்டுதான் நீ இதுவரை நடந்த?
என்ன இப்படி பேசறீங்க.
இருங்க மாமாவை கூப்படறேன்.
வேண்டா, ரெண்டு தடவை சேத்தி நெஞ்சுல கூட இடிச்சுக்க. அந்தாளை கூப்பிடாத.
3
இருட்டில் ஒண்ணுமே தெரியலையே.. எங்க என்ன பார்ட்டு இருக்குன்னே தெரியல.
ச்சீ ஆபாசமாக பேசாதீங்க
அட கெரகம் பிடிச்சவளே, நெஜமாலுமே ஒண்ணும் தெரியல. இந்த மேட்டர காலையில வெச்சுக்கலாம
காலையில வெளிச்சமாக இருக்குமே?
நைட்டுல கரும்னு இருக்கும்
கிண்டல் பண்ணாதீங்க.
அப்பன் ரூமு அப்படியே சென்னியங்கிரி ரைஸ்மில்லு மாதிரியே இருக்கு. இங்க ரொமான்ஸ் வர்றது எல்லாம் கே 1 பஸ், கரெக்ட் டைமுக்கு வர்ற மாதிரி. ரொம்ப கஷ்டம்.
செரி, செரி உனக்கு பெண் குழந்தை இஷ்டமா, பையனா?
ஆஸ்பத்திரில ஆர்டர் கொடுத்து செஞ்சிருவமா? படுத்து பொரண்டு ஒரே கசகசன்னு..
போடா...
செரி கோபப்படாத.. எனக்கு பெரிய பிருந்தா சாயல்ல குட்டி பிருந்தா வந்தா போதும்.
ஏன்? எல்லாரும் பையனத்தான கேப்பாங்க?
பொண்ணுக்கு இருக்கிற துணிச்சல் பையனுக்கு கிடையாது. எனக்கு.. நமக்கு பொண்ணு பொறக்கணுங்கிறதுதான் என் ஆசை.
என்னோட சாய்ஸ் எப்பவும் பெஸ்ட் என மூச்சுமுட்ட கன்னத்தில் முத்தினாள்.
நிறைந்தது.
படம்: ஐசிகா இன், அல்கா மார்வகா - பின்டிரெஸ்ட்
உதவியவர்கள்: மெய்யருள், கே.என்.சிவராமன், கவிதா, ஜெயமணி, பழனியம்மாள், அருக்காணி.