சீனா, வளர்ச்சிக்கு கொடுத்த விலை என்ன? சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன்

 

 

 

 

 

 

 

சீனா வல்லரசு ஆனது எப்படி?

ரமணன்

அனைவரும் தெற்கு சீன கடல், பிற நாடுகளுக்கு வழங்கும் கடன் என பல விஷயங்களிலும் சீனாவை கவலையுடன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு எப்படி முன்னேறியது என்பதை சொல்லும் ஏராளமான நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ரமணன் எழுதியுள்ள இந்த நூல் அந்த வகையில் ஏராளமான தகவல்கள், ஆராய்ச்சிகள் என சீனாவின் வளர்ந்த கதையை எளிமையாக முன்வைக்கிறது. சீனாவின் வளர்ச்சி, உள்நாட்டில் எதிர்கொண்ட சவால்கள், கிராமங்களை அழித்து அதனை நகரங்களாக்கி குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை தயாரிப்பு என பல்வேறு சர்ச்சைக்குள்ளான சமாச்சாரங்களையும் நூலில் சொல்லியிருக்கிறார்கள்.

மாசேதுங் காலத்தில் சீனாவில் தொடங்கிய கலாசார, சமூக பொருளாதார மாற்றங்கள், டொங்பிங், ஜின்பிங் வரை அப்படியே தொடர்வதையும் சிறப்பாக விவரித்துள்ளார் ரமணன். குறிப்பாக நிலச்சீர்திருத்தங்கள். இந்த விஷயத்தில் இந்தியா கற்றுக்கொள்ள நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீர்த்திருத்தங்களாக முயன்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்த நாடு சீனா. இவற்றை ஒரே நேரத்தில் முயல்வதால் இந்தியா முன்னேற முடியவில்லை என்ற கருத்தையும் நூலில் கூறிவிடுவதால் என்ன பிரச்னை என்ற வாசகர்களின் சந்தேகமும் தீர்கிறது.

சீனாவின் வளர்ச்சிக்கு காரணமாக ஒற்றைக் கட்சி சர்வாதிகார முறையை விளக்கியிருப்பது அருமை. அதனை வைத்து எப்படி நாட்டை கண்காணிக்கிறார்கள், இதிலும் கூட நாடு முழுக்க ஊழல் பரவிய தன்மையையும் விளக்கியிருக்கிறார்கள். உள்நாட்டில் பொருளாதாரம் பலமாக இல்லாதபோதும் ஏற்றுமதியில் சாதனை என்ற சீனாவின் எடுத்துக்காட்டு அனைத்து நாடுகளுக்கும் பொருந்துவது கடினம்.

அமெரிக்கர்களின் தோளில் கால் வைத்து அவர்களின் சுயநல அரசியலைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே முந்தும் நாடாக சீனா வளர்ந்து வந்ததற்கு காரணம், அவர்களின் அப்பழுக்கற்ற நாட்டுப்பற்று மட்டுமே காரணம். மேலும் கட்சி்யில் பதவிக்காலம் முடிந்தாலும் வளர்ச்சி திட்டங்கள் நிற்காமல் செயல்படுத்தப்படுவது முக்கியமான காரணம்.

இந்தியா, சீனாவின் தொழில்வளர்ச்சி சார்ந்து கற்று்க்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதேநேரம் தவிர்க்கவும் பல விவகாரங்கள் உள்ளன. தொழில் சார்ந்த நூலில் ரமணன் எழுதிய இந்த நூல் முக்கியமானது.
கோமாளிமேடை டீம்  
 

கருத்துகள்