எதிர்காலத்தில் போர்க்களத்தில் அதிகம் பயன்படும் டிரோன் விமானங்கள்!
இன்று மனிதர்கள் செல்லமுடியாத இடங்களுக்கு டிரோன்கள் செல்கின்றன. பணிகளை முடிக்கின்றன. தீவிரவாதிகளை கண்டறிந்து களையெடுப்பது, முக்கியமான இடங்களை கண்டறிவது, பாதுகாப்பு பணிகளை செய்வது, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவது ஆகியவற்றுக்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
உளவாளி
இங்கிலாந்தில் தரானிஸ் என்ற பெயரில் டிரோன் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதன் வேகம் 1,127 கி.மீ. இதனை ரேடார் மூலம் கூட பார்க்க முடியாது. விரைவில் போர்க்களத்தில் டிரோன்கள் நிறைய பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன. க்வாட்காப்டர் எனும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் மூலம் குறிப்பிட்ட ஆட்களை கூட திட்டமிட்டு கண்காணித்து கொலை செய்யமுடியும். இதுபற்றி எலன் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக்கி ஆகியோர் இப்போதே எச்சரித்து விட்டார்கள்.
அமெரிக்கா இத்தகைய தாக்குதல்களை தீவிரவாதிகளிடம் சோதித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிரோனை ஒருவர் அமெரிக்காவில் இருந்தே இயக்கினால் போதும். சேதம் குறைவு பாருங்கள். உடைந்தாலும் டிரோன் மட்டும்தான் போகும். இலக்கை சரியானபடி தாக்குவதும் எளிது..
விண்வெளி ஆய்வு
நாசா பல்வேறு ஆய்வுகளுக்கு மனிதர்களை விட ரோவர்களை, டிரோன்களை நம்புகிறது. காரணம், மனிதர்களாக இருந்தால் அவர்களுக்கு வேறு கோளில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற விஷயங்களை செய்யவேண்டும். ஆனால், ரோவர், டிரோன் என்றால் அங்குள்ள சூழலை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி அதனை தயாரித்தால் மட்டும் போதும். செலவும் குறைவு. இப்படியெல்லாம் பிற விண்வெளி அமைப்புகளும் இனி யோசிப்பார்கள்.
சூறாவளி ஆய்வு
அமெரிக்காவில் சைரன்ஸ் புராஜெக்ட் என்ற பெயரில் சூறாவளியை ஆராய்வதற்கென்றே டிரோன்களை தயாரித்துள்ளனர். சூறாவளியை பின்தொடர்ந்து சென்று ஆராய்வதே இதன் பணி. மணிக்கு 160 கி.மீ பயணிக்கும் டிரோன் விமானத்திற்கு நீண்ட இறக்கைகள் உண்டு. இதனால் காற்றின் பரப்பில் அதிக நேரம் இருக்கமுடியும்.
டிரோன்டிப்ளாய் என்ற நிறுவனமும் சூறாவளியைத் துரத்தும் சிறு விமானங்களை தயாரித்து வருகிறது.
ஆர்க்டிக் பிரதேச ஆய்வு
வட, தென் துருவங்களை ஆராய பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இதில் கனடா அரசு அங்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்புவதை விட டிரோன்களை அனுப்பினால் என்ன என்று யோசித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. அங்கு வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ், மேலும் பனிப்புயல் பிரச்னைகளும் உண்டு. இதில் டிரோனின் பேட்டரிகள் எப்படி செயல்படும் என்பது கேள்விதான். ஆனாலும் முயற்சிகளுக்கு குறைவில்லை. மனிதர்களை அனுப்புவதை விட டிரோன்களை அனுப்புவது பாதுகாப்பானது. செலவு குறைவானது என கனடா அரசு நினைக்கிறது.
விண்வெளியில் புகைப்படம்.
வால் ஈ படத்தில் ஈவா என்ற ரோபோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். அதேபோல விண்வெளியில் பால் கேமரா ஒன்று பொருத்தப்பட்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. இது ஜப்பானின் தயாரிப்பு.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக