பெண்கள் கல்வி பற்றி முடிவெடுக்கும் முடிவு எப்படியிருந்தாலும் சரிதான்! - வித்யா பாலன்

 

 

 

 

 

Vidya Balan signs up for yet another biopic? | AVSTV ...
வித்யாபாலன்

 

 

வித்யாபாலன், இந்தி திரைப்பட நடிகை

நீங்கள் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற பெண்கள் சார்ந்த கதைகள்தான். இக்கதைகளை நீங்களாகவே இப்படி வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா?

அப்படிக்கூறமுடியாது. ஆழ்மனதில் இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆசை இந்த முறையில் வெளிப்பட்டிருக்கலாம். முன்னர் ஆண்கள் வென்றதை படமாக எடுத்தார்கள். இப்போது பெண்கள் முறை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.  வெற்றி பெற்ற பெண்கள் என்று நீங்கள் சொன்னாலும் கூட அவர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகம் கிடையாது. சுலு என்ற பெண்ணுக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவதை பற்றி ஏதும் தெரியாது. அவள் சகுந்தலா தேவி அளவுக்கு புத்திசாலியும் கிடையாது. சினிமா என்பதை சூழல்களை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று பார்க்கலாம். சுலு வெறும் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி வெளியே செல்லவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டவள். அவள் தனது குடும்பத்தையும், கனவையும் ஒன்றுபோலவே நினைக்கிறாள். அதனை சமநிலையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள். நமது நாட்டில் தாரா ஷிண்டே, சகுந்தலாதேவி, சுலோச்சனா ஆகியோர் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இப்போது நிறைய அரசியல்வாதிகள் உயர்கல்விக்கு எதிராக பேசி வருகிறார்கள். உங்களையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் கல்வி கற்றவர். ஆனால் படத்தில் சகுந்தலாதேவி பாத்திரம் முறையான கல்வி பயின்றவரில்லை. கல்லூரி படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் என நினைக்கிறீர்களா?

கல்லூரி படிப்பை ஒருவர் கைவிட்டுவிடக்கூடாது என்பதுதான் எனது கருத்து. காரணம், அங்கு வகுப்பறையில் கற்பதை விட அதற்கு வெளியில் கற்பது அதிகம். அப்போது நாம் நிறைய பொறுப்புகளை சுமக்கவேண்டிய அவசியமில்லை. எனவே, அதனை எப்போதும் கைவிட்டுவிடக்கூடாது. நான் பிளஸ் 2 படிப்போடு படிப்பை தலைமுழுக நினைத்தேன். அப்போது எனக்கு டிவியில் வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனால் எனது பெற்றோர் ஒரு டிகிரியை நான் முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அப்போது எனக்கு அவர்கள்மேல் கோபம் இருந்தது. ஆனால் கல்லூரி செல்லும்போதுதான் வாழ்க்கை பற்றிய நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இதில் தனிப்பட்டவர்களைப் பொறுத்து சரி தவறு என கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை கல்லூரி நாட்கள் விலைமதிப்பு இல்லாதவை.

நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்வதாக நினைக்கிறீர்களா?


நிச்சயமாக. நிறைய விஷயங்களை அப்படிக் கற்றுக்கொண்டுள்ளேன். எனது அம்மா ஏன் இப்படியிருக்கிறார் என நிறைய முறை நினைத்துள்ளேன். அந்த பார்வை இன்று மாறியுள்ளது. துமாரி சுலு படம் மூலமாக, அனைவரையும் ஒரே மாதிரி விஷயங்களைக் கொண்டு அளக்ககூடாது என புரிந்துகொண்டிருக்கிறேன். முதலில் குழந்தை பெற்றுக்கொள்வது வாழ்க்கையை பூர்த்தி செய்வதாக நம்பிக்கை நிலவியது. பின்னாளில் எனக்கு பெண்கள் நல்ல வேலைக்குச்சென்று தங்கள் திறமையை நிரூபிக்கவேண்டும். சம்பாதிக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த விஷயங்களைப் பொறுத்தவரையில் பெண்கள் தங்களுக்கு எது சரியென்று தேர்ந்தெடுத்தாலும் அது சரிதான். அவர்களின் உரிமை அது.

அப்படியென்றால் அவர்கள் எடுக்கும் முடிவில் சமூக அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கவில்லை என்கிறீர்களா?

பங்கு இருக்கிறது. அதில் பெண்களின் ஆளுமையும் முக்கிய பங்கு வகிக்கிறது. என்னுடைய அம்மா, தினசரி வெளியே சென்று வருவது எனக்கு பிடிக்கவில்லை என்றார். நிச்சயம் துமாரி சுலு பட நாயகி போல அவர் இருந்தால், நடனம் ஆடும் கலைஞராக அல்லது பாடகியாக வந்திருக்கலாம். அதுபோல வாய்ப்புகள் இருக்கிறது என்று கூட அவர் காலத்தில் தெரியாமல் இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும். சமூக நிர்பந்தம், விதிமுறைகள் எல்லாமே இருக்கிறதுதான்.

ஆண்களுக்கு கொடுப்பது போல, இருப்பது போல பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் இல்லையே?

இதற்கு பதில் சொன்னால் எனது பதில் தவறு அல்லது நான் முரட்டுத்தனமாக பதில் சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள். வாய்ப்புகள் என்பது பெரும்பாலும் ஆண்கள் உரிமையாகவே இருக்கிறது. ஆண்கள் இதுபோன்ற வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதும் கூட கட்டாயமாக இருக்கிறது. இல்லையென்றால் சமூகம் அவர்களை எப்படி பார்க்கும் என்ற பிரச்னையும் இருக்கிறது.

பெண்களுக்கானது வீட்டுப்பொறுப்பு என்பது எப்போதும் கூறப்பட்டு வருகிறதே?

உண்மைதான். அதற்கு ஆண்கள் வீட்டுவேலைகள், பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் இந்த நிலை மாறும்.

 ரீடர்ஸ் டைஜெஸ்ட்

அண்ணா எம்.எம் வெட்டிக்காட்

 

 

 

 

கருத்துகள்