ஃபேன்டசி கதைகள் வழியாக முதலாளிக்கு ஐடியா சொல்லி ஹோட்டலை கைப்பற்றும் நாயகன்! - பெட்டைம் ஸ்டோரிஸ் 2008
பெட்டைம் ஸ்டோரிஸ் |
பெட்டைம் ஸ்டோரிஸ்
ஸ்டீக்கர் பிரான்சனுக்கு தன் தந்தையின் சிறிய ஹோட்டலை தான் வளரும்போது பெரிதாக மாற்றி கட்டவேண்டும் என்பது கனவு. ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் ஹோட்டல் கைவிட்டு போகிறது. தந்தை அந்த ஹோட்டலை விற்றவரிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தனது மகனை அந்த ஹோட்டலுக்கு நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்பது. ஆனால் தோற்றுப்போனவர்களின் கோரிக்கை என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது. எனவே, அவரின் மகன் ஸ்டீக்கர் ஹோட்டல் பணியாளராகவே இருக்கிறான். அதனை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறான். ஆனால் அதன் முதலாளி அதனை கண்டுகொள்வதில்லை. கூடவே தனது மகளைக் கட்டிக்கொள்ளவிருக்கும் மணமகனுக்கு புதிய ஹோட்டலுக்கான நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைக்கிறார்.
இந்த நிலையில் ஸ்டீக்கர் தனது அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவருக்கு அது பிடிக்கவில்லை. காலையில் பள்ளி ஆசிரியை ஜில் குழந்தைகளை பார்த்துக்கொள்வார். இரவில் ஸ்டீக்கர் பார்த்துக்கொள்ளவேண்டும். அதேநேரம் புதிய ஹோட்டலுக்கான ஐடியாவை ஸ்டீக்கரிடம் அவரது முதலாளி கேட்கிறார். ஐடியா சொன்னால் புதிய ஹோட்டலுக்கு நிர்வாகியாகும் வாய்ப்பு ஸ்டீக்கருக்கு கிடைக்கும். அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
குழந்தைகளுக்கு சொல்லும் கதையில் எதிர்மறையாக ஸ்டீக்கர் சொல்லுவதும், பின்னர் அதை குழந்தைகள் நேர்மறையாக சொல்லி முடிப்பதும் கதையின் முக்கியமான அம்சம். நிஜ வாழ்க்கையில் சுப முடிவு கிடையாது என விரக்தியாக பேசுகிறார் ஸ்டீக்கர். இதை மனதில் வைத்துக்கொண்டு குழந்தைகள் கதையின் இறுதியில் உருவாக்கும் கதையின் ட்விஸ்ட் செமையாக உள்ளது.
ஆடம் சாண்ட்லர் படத்தின் நாயகனாக விரக்தி, அப்பாவின் கனவை கண்களில் தேக்கி சிறப்பாக நடித்திருக்கிறார். இது குழந்தைகளுக்கான படம் என்பதால் பல்வேறு ஃபேன்டசி விஷயங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஆடம் சொல்லும் நிறைய கதைகள்.
நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு உழைத்தால் நமக்கான பயன்கள் நாம் தேடாமலேயே நமக்கு வந்து சேரும் என்று சொல்லுகிற படம்.
ஹோட்டல் கதை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக