பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

 

 

 

Nature Conservation, Responsibility, World, Hands
பிக்சாபே

 

 

 

 

பசுமை பாதுகாப்பு வளையம்!

பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம், புயல், வறட்சி, சுனாமி, நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கியக்காரணம், அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான். தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2100ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால், நகரில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள், சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது. ”மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ.நா. அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார். இயற்கைக் சூழல் பற்றி ஐ.நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது, நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது.

தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை ICLEI என்ற பன்னாட்டு அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் 1,750 உள்ளூர் நிர்வாக அமைப்புகள் துணையுடன் இயற்கையை பாதுகாக்கும் செயல்பாடுகளைச் செய்து வருகிறது. அதில் இந்திய நகரங்களான கொச்சி, பனாஜி, தானே, காங்டொக், நாக்பூர், ஹைதராபாத், ராஜ்கோட், சோலாபூர், டேராடூன் ஆகியவை இணைந்துள்ளன. இதில் புதிதாக காடுகளை வளர்ப்பது நோக்கமல்ல. இந்நகரங்களில் ஏற்கெனவே உள்ள காடுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை அழியாமல் காப்பதே திட்டம். இயற்கை வளங்களை பட்டியலிடுவது, மாசுபாட்டைக் குறைப்பது, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது ஆகிய பணிகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.

இந்திய நகரங்களில் நகரங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைப் பட்டியலிடுவதே முதல் பணி. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள உயிரினங்களை அறிவதோடு, அழிந்துபோனவற்றைப் பற்றியும் விவரங்களைச் சேகரிக்க முடியும். இந்தியா, இயற்கை பன்மைத்துவம் காக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. தற்போது இயற்கை ச்சூழல் பற்றி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐ.நா அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. 2011-20 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இயற்கைச்சூழல் மேம்பாடுகள் இதில் இடம்பெறும். சூழல் காக்க நகர கார்ப்பரேஷன்கள் எடுத்த செயல்பாடுகளைப் பற்றி இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கும். மக்கள் உயிரிபன்மைத்துவ பதிவேடு (PBR) என்று இதற்குப் பெயர். ”இந்த அறிக்கை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்களிடமுள்ள இயற்கை வளங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டு செயல்படமுடியும்.” என்றார் தெற்காசியாவின் ஐசிஎல்இஐ அமைப்புத் தலைவர் இமானி குமார்.

கொச்சியில் உள்ள தேவரா பெரந்தூர் கால்வாய், சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா ஆகியற்றை மேம்படுத்தும் பணியை நகர நிர்வாகம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பதற்கான பணிகளையும் அரசின் உதவி மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்று செய்துவருகிறது. சூழல் அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்களிடையே இயற்கைச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐசிஎல்இஐ அமைப்பு விழிப்புணர்வு நூல்களையும் காமிக்ஸ்களையும் வெளியிட்டுள்ளது.

தகவல்:IE


கருத்துகள்