யசவந்தன் என்ற மனிதரைப் பற்றிய எழுத்தாளர் அறியும் பிம்பங்கள்! - அழிந்தபிறகு - சிவராம காரந்த், கன்னட நாவல்
சிவராம காரந்த் |
அழிந்த பிறகு
சிவராம காரந்த்
சாகித்ய அகாதெமி
பம்பாயில் வாழும் யசவந்தர் என்பவரின் தந்தி எழுத்தாளரின் வீட்டுக்கு வருகிறது. அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவரை வந்து பார்க்கும்படியும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் எழுத்தாளரால் சரியான நேரத்திற்கு யசவந்தரை சென்று பார்க்கமுடியவில்லை. இதன் காரணமாக தாமதமாக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அவர் மருத்துவமனையில் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவருக்கு இறுதிச்சடங்குசெய்து முடித்தபிறகு பார்த்தால், அவரது அறையில் உள்ள கடிதங்கள், வீட்டுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றை படிக்கிறார். அதன் வழியே யசவந்தர் யார் என்பதை எழுத்தாளர் அறிந்துகொள்வதுதான் கதை.
நாவல் முழுவதும் யசவந்தர் என்ற மனிதர் யார் எப்படிப்பட்டவர் என்பதை பல்வேறு மனிதர்களின் கருத்துகள், விவரிப்பு மூலமே சொல்லியிருக்கிறார். ஆசிரியர். யாருக்கேனும் துயரம் என்றால் தன்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும் மனிதர்தான் யசவந்தர். அவர் ஒருகாலத்தில் தனது தந்தை, தாத்தா வழி சொத்துக்களை பிறருக்கு கொடுத்தே அழிக்கிறார். பின்னாளில் திருமணமாகும்போது சொத்துக்களை பாடுபட்டு சேர்க்கிறார். இம்முறை முன்பு செய்த தவறுகளை செய்யவில்லை. ஆனால் மனதில் நிம்மதியில்லை. அதற்கு அவர் எடுக்கும் முடிவுதான் கதையில் முக்கியமான பகுதி.
கதையின் பெரும்பகுதி, எழுத்தாளர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பேச்சுக்கள் என செல்கிறது. மீதி அவர்களைப் பற்றி சுருக்கமாக யசவந்தர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை வாசகர்கள் வாசிக்கலாம்.
இக்கதையில் வரும் பார்வதியம்மாள் பாத்திரம், அப்பழுக்கில்லாதது. தனக்கு அனுப்பும் பணத்தை சிலர் திருடி தின்கிறார்கள் என்றாலும் கூட அதனை பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிற பாத்திரம். இப்படி இருக்கமுடியுமா என சந்தேகமே தோன்ற வைக்கும் பார்வதியம்மாள் உண்மையில் தூற்றப்படுவது அதே குணத்திற்காகத்தான். பணம் ரத்த வழி உறவுகளுக்கு கிடைக்கவில்லையென தூற்றப்படுகிறாள்.
ஜலஜாட்சி உறவுகளில் வறுமையை துணையாக கொண்டவள். ஆனால் அவளுடைய மனம் விசாலமானது. அவளுக்கு தாத்தாவின் பெயரையே சூட்டி வளர்க்கிறார்கள். சரசியின் மகளான இந்துமதியும் அப்படியொரு பாத்திரம்தான். பெரும்பாலும் இப்படிப்பட்ட அவதூறுக்கு இலக்கான நிலையில் யாரும் அப்பா மீது வஞ்சம் கொண்டிருப்பார்கள். இதில் இந்துமதிக்கு அந்தளவு வெறுப்பு கிடையாது. அவர் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணி கணவருடன் வாழ்கிறாள். பணத்தை தேடி வேட்டையாடும் உறவுகளுக்கு மத்தியில் இப்படியொரு மனிதர்களாக என்று தோன்றும்படி உள்ள பல்வேறு பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மறக்கவே முடியாதவை.
வாழ்க்கை வாழ்கிறோம். உயிர் உடலை விட்டு போனபிறகு, நம் சார்பாக உலகில் மிஞ்சியிருப்பது என்ன? அதிகம் கொடுத்திருக்கிறோமா, பெற்றிருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டு பதில் தேடச்சொல்லியிருக்கிறார் ஆசிரியர் சிவராம காரந்த்
வாழ்க்கைப் பயணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக