பணத்தை விட மதிப்பான பொருளைத் தேடும் நாயகன்! - போனி -2009 சுமந்த்

 













போனி -2009
ராஜ் பிப்பல்லா
சுமந்த், கீர்த்தி கர்பண்டா






அனாதை ஆசிரமத்தில் வளரும் டிடி, சின்னா என்ற இருவருக்கும் ஒரே ஆதர்சம், அங்கு சமையல் செய்யும் பெண்மணி சரஸ்வதம்மா. இவர்தான் சிறுவர்களின் குறும்புகளுக்கு பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை ஆசிரமத்தில் தங்கி படிக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அவர் ஒருமுறை, எந்த விஷயம் செஞ்சாலும் காசு கிடைச்சாத்தான் செய்யறீங்க. ஆனா, பணத்தை விட மதிப்பான விஷயம் ஒண்ணு இருக்கு, என தன் நெஞ்சை தொட்டு அதிலிருந்து ஏதோ எடுப்பது போல எடுத்து இருவரின் கையில் வைக்கிறார் சரஸ்வதம்மா. 




பணத்தை விட மதிப்பானதை டிடி, சின்னா அடையாளம் கண்டு கொண்டார்களா இல்லையா என்பதுதான் கதை. 

படம் ஆக்சன் தான். அதிலேயே காமெடியை வித்தியாசமாக பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதற்கு ஆண்ட்ரூவின் கேமரா, எம்.ஆர் வர்மாவின் அற்புதமான எடிட்டிங் உதவியிருக்கிறது. இதை நீங்கள் அறிய படத்தின் பாடல், சண்டைக்காட்சி, துரத்தல்களைப் பார்த்தாலே போதுமானது. 

டிடி, சின்னா இருவரும் வளர்கிறார்கள். கிரி என்ற ரௌடியிடம் மாமூல் வசூல் செய்யும் ஆட்களில் ஒருவராக இருக்கிறார்கள். அத்தனை பேர்களிலும் டிடியும் சின்னாவும் மட்டுமே கொஞ்சம் விவரமான கைகள். 

டிடி, சின்னா ரௌடியாக இருந்தாலும் கூட அவர்களது ஒரே நோக்கம், சரஸ்வதம்மாவின் நினைவாக புளிச்சோறு கடை ஒன்றை தொடங்குவதுதான். இதற்காக பணம் சேர்க்கிறார்கள். ஆனால் டிடியின் காதலி, அதை ஆட்டையப் போட்டுக்கொண்டு தான் விரும்பும் ஒருவனோடு ஓடி விடுகிறாள். பிறகு பெண் சகவாசம் குலநாசம் என சொல்லும் சின்னாவின் யோசனையைக் கேட்கிறான் டிடி. 

ஆனாலும் அப்படி இருந்தால் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ரமணா கோகுலா போட்ட பாடல்களை என்ன செய்வது? இதற்காகத்தான் வருகிறார் என்ஜிஓ நடத்தும் பிரகதி (கீர்த்தி). இவர் அரசியல்வாதியின் பெண் பிள்ளை. பணக்கார ர்களின் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? சமூகசேவை தான். இப்படி சேரிப்பகுதி ஒன்றை வாங்கும் ஒருவருக்கு நான்கு கோடி ரூபாயை கொடுத்து மக்களுக்கு உதவ நினைக்கிறார். அந்த முயற்சியில் அவரது அப்பா முதலில் உதவுவதாக கூறுகிறார். பிறகு தான், அந்த நிலத்தை ஆக்கிரமித்து வளைத்து போட நினைப்பதே தன் அப்பா தான் என பிரகதிக்கு தெரிகிறது. எனவே, கிளம்பி தன் அக்கா வீட்டுக்கு சென்றுவிடுகிறாள். அப்போது, அவளுக்கு தோன்றும் யோசனைதான். தான் கடத்தப்பட்டதாக கதை சொல்லி, அப்பாவிடம் இருந்து பணத்தைப் பெற்று அதை நிலத்தை ஏலமிடுவதாக கூறுபவர்களிடம் சொல்லி மக்களுக்கு நிலத்தைப் பெற்றுத் தருவது. 

அப்போது எதிர்பாராதவிதமாக டிடியின் பாஸ் கிரி, பிரகதியை கடத்த சொல்ல டிடி அதை செய்து முடிக்கிறார். அவருக்கு வேலையும் புதிது. அந்த இளம்பெண்ணை கொலை செய்யத்தான் கூட்டி வந்திருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது. உண்மை தெரிய வரும்போது என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதையின் முக்கிய காட்சி. 

படம் செல்லும்போது திடீரென படத்தின் பாத்திரம் நம்மைப் பார்த்து பேசும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகிறது. இது படத்தோடு ஒன்ற வைப்பதை தடுக்கிறது. புது ஃபிளேவரில் படம் எடுக்க ராஜ் பிப்பல்லா எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் அது சரஸ்வதம்மா புளிச்சோறு போல சுவை கூடி வரவில்லை. 

சுமந்த் அவரது நண்பராக வரும் த்ரிநேத்ருடு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். ரௌடியாக இருந்தாலும் தனது மனசாட்சி உறுத்தலை தணிகெலா பரணி சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரமண கோகுலின் இசை பாடல்களுக்கு பொருத்தமாக உள்ளது. கடைசி ட்விஸ்ட் படத்தில் சரியாக எடுபடவில்லை. 

போனி, திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சரியாக போணியாகவில்லை. ஆனாலும் படத்தை பார்க்க மோசம் ஏதுமில்லை. 

கோமாளிமேடை டீம் 
















கருத்துகள்