இயற்கைச் சூழலைக் காக்க வேகமாக உருவாக்கப்படும் மியாவகி காடுகள்!
நகரங்களில் பெருகும் மியாவகி காடுகள்!
பெருநகரங்களில் இயற்கையான காடுகளை உருவாக்க அதிக நிலப்பரப்பு தேவை. இப்பிரச்னையைத் தீர்க்க மியாவகி காடுகள் உதவுகின்றன. 1970ஆம் ஆண்டு ஜப்பானிய உயிரியலாளர் அகிரா மியாவகி(Akira Miyawaki), மரக்கன்றுகள், புற்கள், புதர் தாவரங்களை இணைத்து வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
மியாவகி முறையில், தாவரங்கள் நெருக்கமாக நடப்படுவதால், வெளிச்சத்திற்கு போட்டிபோட்டு வளர்கின்றன. இதன்மூலம்,பெருநகரங்களில் சிறு காடுகளை வேகமாக உருவாக்கலாம். அகிரா, தன் வாழ்நாளில் பல்வேறு நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட சிறு காடுகளை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவில், ஹைதராபாத் நகரில் பிரமாண்டமாக 10 ஏக்கரில் மியாவகி காடு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருநகர மாநகராட்சி 1,000 மியாவகி காடுகளை உருவாக்க திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில், மண்ணுக்குப் பொருத்தமான தாவரங்கள், மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பதே இலக்காக உள்ளது.
பிற முறைகளை விட மியாவகி முறையில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. இதை யாரும் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்கிறது அஃபாரஸ்ட் சூழல் அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனரான சுபேந்து சர்மா, இந்தியாவில் மியாவகி முறை காடுகளை உருவாக்க பிரசாரம் செய்து வருகிறார்.
பிற காடுகளை விட மியாவகி காடுகள், 30 சதவீதம் அதிக கார்பனை உறிஞ்சுவதாக நெதர்லாந்தின் வேகனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு சூழல் அமைப்புகளும் மியாவகி முறையை ஆதரித்து வருகின்றன. ஆனால், மண்ணுக்குப் பொருந்தாக மர இனங்களைத் தேர்ந்தெடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மண் சார்ந்த மரங்கள் வளர்ச்சியடைய அதிக காலம் தேவை என்பதால், இப்புறக்கணிப்பு என்கிறார்கள் சூழல் வல்லுநர்கள். சூழல் பாதிப்புகளைக் குறைக்க, மியாவகி காடுகள் உதவுகின்றன என்பது உண்மை.ஆனால், அதனை மண்ணுக்குப் பொருத்தமான மரங்களை நடுவதன மூலம் தொடர்ந்தால் நிறைய பயன்களைப் பெற வாய்ப்புள்ளது.
தி இந்து ஆங்கிலம்
நிகில் இயாபன்
fast forward forests (nikhil eapen)
apr 3,2022
http://akiramiyawaki.com/about/thesis/
https://chennai.citizenmatters.in/chennai-guide-to-creating-miyawaki-forests-24787
கருத்துகள்
கருத்துரையிடுக