தேசப்பற்று ஓவர்டோஸாக பொங்கினால்... விஜய் ஐபிஎஸ்

 




















விஜய் ஐபிஎஸ் 
சுமந்த்
இயக்குநர் ஹனுமந்த ரெட்டி 






குலுக்கிய கோலாவாக தேசப்பற்று பொங்க டிஎஸ்பி செய்யும் சீர்திருத்த செயல்கள் தான் படத்தின் கதை. 

படத்தில் தெலுங்கு படத்திற்கான கிளிஷே காட்சிகள் மிகச்சிலவே உண்டு. மற்றபடி நிறைய விஷயங்களை இயக்குநர் சீரியசாகவே சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், காட்சிகளாக அவை ஒருங்கிணைப்பாக புத்திசாலித்தனமாக மாறவில்லை. 

மேலேயுள்ள போஸ்டரைப் பார்த்தால் அதில் ஒரு பெண் தலையை ஒருக்களித்து புன்னகைப்பார். இவரைத் தவிர்த்து படத்தில் வரும் அனைவரும் காரண காரியங்களோடு இருக்கிறார்கள். போஸ்டரில் இடம் காலியாக இருக்கும் என்பதால் நாயகியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். படத்தில் இவரால் சல்லி பைசா பிரயோஜனம் கிடையாது. 

நேர்மையாக நெருப்புபோல இருக்க நினைக்கும் விஜய் சந்திக்கும் ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளால் நிறைய ஆபத்துகளை சந்திக்கிறார். இதனால் கண்பார்வையை இழக்கிறார். பிறகு, மோசமான குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு பார்வை பெற்று நைச்சியமாக தந்திரமான வழியில் அதிகாரத்தைப் பெற்று அரசியல்வாதிகளை ஏண்டா இவனை உயிரோடு விட்டோம் என்று நினைக்கும்படி யோசிக்க வைக்கிறார். இறுதிவரை விஜய்க்கும், மாநில முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நடக்கும் மோதல்களே கதை. 

முதல் காட்சி நம்பிக்கை ஊட்டும்படி இருந்தது. டிஎஸ்பியிடம் ஒரு கல்லூரி பெண் புகார் கொடுக்க வருகிறார். தான் விபச்சாரம் செய்ய அனுமதி கேட்கிறார். கோபமாகும் டிஎஸ்பி யோசிக்க அவசியமில்லாமல் அப்பெண்ணை அறைந்து கீழே தள்ளுகிறார். அதற்குப் பிறகு தான் ஏன் அப்படி சொன்னேன் என்று அந்த பெண் விளக்கிச் சொல்கிறார். அரசியல்வாதி ஒருவரின் மகன் கல்லூரியில் அந்த பெண்ணின் பின்னே சுற்றி வந்து படிக்கவிடாமல் காதலிக்கும்படி தனக்கு தெரிந்த வழியில் மிரட்டுகிறான். இதை விஜய் எப்படி டீல் செய்கிறார் என்று பார்த்தால், புதுமையான எந்த ஐடியாவும் இல்லை. கல்லூரியில் வைத்து மாணவனை அடி வெளுக்கிறார். பிறகு அவனை இழுத்துக்கொண்டுபோய் அவனது வீட்டில் வைத்தே அடிக்கிறார். அவனது செல்ல அம்மா, அத்தை என மூன்று பெண்கள் டிஎஸ்பியை மிரட்டுகிறார்கள். இந்த மோதல் பின்னணியில் கதை வளர்கிறது. 

வழக்கமான போலீஸ் கதை கிடையாது. இயல்பான போலீசின் பிரச்னைகளை பற்றி பேசுகிறார்கள் என்றால் அதுவும் சிக்கல்தான். நாயகன் உணர்ச்சிகரமானவன், எளிதாக கிளர்ந்தெழக் கூடியவன். சட்டத்தை நம்புகிறவன். அதை வைத்தே அவனை வேலையிலிருந்து விலக்குகிறார்கள். அதற்கு பின்னான காட்சியில் வீட்டில் விஜய் பேசும் காட்சி அபாரமானது. தனது மனவலியை அவன் அம்மாவிடம் விவரிப்பான். 

தன்னை பின் தொடர்ந்து காதலிக்கும் காதலியிடம் பேசும் காட்சியும் முக்கியமானது. படத்தில் குடும்பம் அவனது வேலையை எப்படி பார்க்கிறது என்பதையும் ஓரளவுக்கு நன்றாகவே காட்சி படுத்தியிருக்கிறார்கள். 

சுமந்த்தான் படத்தை பார்க்க வைக்கிறார். காவல்துறை அதிகாரியாகவும், சாதாரண மனிதனாகவும் எந்த முறையில் நடந்துகொள்வது என தவிக்கும் இடம் படத்தில் ஓரிடமுண்டு. தனது ஆசிரியரின் மூன்றாவது மகள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு உயிரோடு இருக்கும் தகவலை விஜய் அறியும் இடம். அதற்கு முந்தைய  காட்சிகளில் தான் அரசியல்வாதிகள் பற்றிய உண்மையை சொல்லுவதாகவும் அப்படி சொல்லாதபோது நான் அந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொள்வதாகவும் சத்தியம் செய்திருப்பான் விஜய். இது விஜய்யின் பலவீனமான மனதைக் காட்டுகிறது. வந்த கூட்டமும், அரசியல்வாதியின் காசுக்கு பணியும் ஆட்களின் மந்தைதான். இதற்கு எதற்கு இந்த எமோஷனைக் காட்டுகிறார் நாயகன்?



அடுத்து, கல்லூரி பெண்ணை அரசியல்வாதியின் வாரிசு கொலை செய்ய துரத்துகிறார். முதல் காட்சியில்தான் விஜய் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய லெக்சர் கொடுத்திருப்பார். ஒரு பெண்ணை காப்பாற்ற நான் தான் வரணுமா? இங்கேதான் இருக்கிற நீங்கள் என்ன செய்கிறீர்கள் என.. வாரிசு படித்துக்கொண்டிருந்த பெண்ணை துரத்தி வந்து கத்தியால் வயிற்றில் சதக்...சதக் என வாழை மரத்தை கத்தியால் வெட்டுவது போல குத்துவார். ஆனால் அங்கு ஜீப்புக்கு மிகச்சரியாக வரும் நாயகன், பெண்ணை காப்பாற்றாமல் வாரிசு வில்லனை அடித்து துவைப்பார். அதாவது நீதியை நிறைவேற்றுகிறாராம். ஏஸ் யூஸூவலாக நீதிமன்றத்தில், விஜய் வழக்கில் தோற்றுப்போக கொலை செய்யப்பட்ட  பெண்ணின் அம்மா பேசும் வசனம் சங்கடமானது. 

இறுதிக்காட்சியில் எந்த புத்திசாலித்தனமுமில்லை. நிறைய இடங்கள் வன்முறையை எளிதாக ஆதரிக்கும் போக்குதான் உள்ளது. 

நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடை குலுக்கினால்....

கோமாளிமேடை டீம் 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்