தொழிலில் ஜெயிக்க உங்களை நீங்கள் நம்ப வேண்டும் - குஷ்னம் அவாரி, நிறுவனர், பனாசே அகாடமி

 












குஷ்னம் அவாரி

நிறுவனர், பனாசே அகாடமி

விமானப் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. எப்படி விண்ணப்பிப்பது, வேலைக்கான பயிற்சி, தகுதிகள் என்ன என்பதை இன்னுமே அறியாமல் தடுமாறுகிறார்கள். இதைத்தான் குஷ்னம் அவாரி தனது பனாசே அகாடமி மூலம் தீர்த்து வருகிறார். பயிற்சி கொடுப்பதோடு வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறார். 

அவாரியின் செயல்பாடுகள் காரணமாக நான்கு ஆண்டுகளாக 2016 தொடங்கி 2019 வரையில் சிறந்த கல்வி நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மேற்கு இந்தியாவில் விமான பணிப்பெண்களை உருவாக்கும் கல்வி நிறுவனமாக மாணவர்களின் ஸ்டூண்ட் சாய்ஸ் விருதையும் பெற்றுள்ளது. 

இந்த துறையில் சாதிக்க உங்களுக்கு ஊக்கம் கொடுத்த நபர் யார்?

எனது அம்மா ஜரின் பாஸ்லா தான் எனக்கு ஊக்கமளிக்கும் நபர். அவர், மானேக்ஜி கூப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைவராக இருக்கிறார். கல்வியாளரும் கூட. இளைஞர்களுக்கு ஊக்கமளித்து முன்னேற்றம் அளிப்பதில் அவர்தான் எனக்கு ரோல்மாடல். எனது கணவர் பெர்சி அவாரி எப்போதும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னுடன் நின்றிருக்கிறார். எனக்கு இன்று வரை ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வருகிறார். 

தொழில்சார்ந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னென்ன?

வாழ்க்கை முழுவதுமே கற்பது அவசியம். நம் மனதில் ஒரு விஷயம் சரி என்று தோன்றினால், அதில் நிலையாக நிற்பது முக்கியம். நம்மைச் சுற்றியுள்ள சில சூழல்கள் நம் குரலை, நம்பிக்கையை சிதைக்க முற்படலாம். அந்த நேரத்திலும் மனம் குலையாமல் உங்கள் நம்பிக்கையின் பேரில் நிற்கவேண்டும். அது தவறாக போக வாய்ப்பே இல்லை. வேகமாக நகரும் தொழில்துறையில் அனைத்து விஷயங்களும் நேர்மறையாக நடக்கும் என்று கூறமுடியாது. அதனையும் பொறுமையாக எதிர்கொண்டு சமாளித்து கடக்கவேண்டும். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். தீர்மானித்த இலக்கிற்காக கடுமையாக அர்ப்பணிப்பாக உழையுங்கள். பல்வேறு வேலைகளை கவனித்து தீர்மானத்துடன் பெண்களால் செய்யமுடியும். உங்களால் உங்கள் வேலை, குடும்பம், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனிக்க முடியும். சமநிலை பேண முடியும். அதற்கு உங்களை நீங்கள் நம்பவேண்டும் அவ்வளவேதான். 


ஃபெமினா 2021







கருத்துகள்