வெயில் காயும் பாலைவனத்தில் பழிக்குப்பழி! தார் - ராஜ் சிங் சௌத்ரி

 




தார்

ஹர்ஷ்வர்த்தன், அனில் கபூர்

இயக்கம் ராஜ் சிங் சௌத்ரி

வசனம் அனுராக் காஷ்யப்


ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு முகம் கை கால்கள் சிதைக்கப்பட்டு தூக்கில் தூக்கிக் கட்டப்படுகிறார். இதை விசாரிக்கிறார் சுரேகா சிங். அவர் விரைவில் இன்ஸ்பெக்டராக இருந்து பணி மூப்பு பெறவிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு இக்கொலை வழக்கு தலைவலியாக மாறுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்துக்கு பொருட்களை வாங்கி விற்பவராக இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் யார், எதற்கு அங்கு வந்தார், இறந்தவருக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதே படம். 

படத்தின் ஸ்பெஷலே, தார் பாலைவனம்தான். அதன் வறண்ட தன்மையும். அங்கு வாழ்பவர்களின் இரக்கமேயில்லாத தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் குணமும்தான் படத்தின் முக்கியமான அம்சம். 

டெல்லியில் இருந்து கதை ராஜஸ்தானுக்கு மாறி முழுக்க பாலைவனத்திலேயே நடக்கிறது. பழிக்குப் பழி கதைதான். அதை பாலைவனப் பின்னணி முழுக்க மாற்றி விடுகிறது. மேய்ச்சல் மாடுகள், ஆடுகள், இறந்து பாலைவனத்தில் கிடக்கும் மாட்டின் உடல், பாலைவனத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பவனை சாப்பிட வரும் கழுகு என நிறைய காட்சிகள் பார்க்கும்போதே மனதில் வெப்பத்தையும், பதைபதைப்பையும் உருவாக்குகிறது. படத்தில் கெட்ட வார்த்தைகள் இருப்பதை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதை யாரும் தேவையில்லாமல் பயன்படுத்தவில்லை. படத்தில் வரும் பாத்திரங்கள் அனைவருமே அந்தந்த சூழலின் அழுத்தம் காரணமாக விரக்தியாலேயே அப்படி பேசுகிறார்கள். பெரும்பாலும் வசனங்களே குறைவுதான். 

சுரேகா சிங்கைப் பொறுத்தவரை நீதி என்பதை எப்பாடு பட்டும் நிறைவேற்றவே முயல்கிறார். வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்தாலும் கூட கான்ஸ்டபிளுடன் சென்று போதை ஆட்களை தாக்குகிறார். இதன் விளைவாக கான்ஸ்டபிள் இறந்துபோகிறார். கூடவே இவருடைய காலிலும் குண்டு படுகிறது. அப்போதும் ஹர்ஷ்வர்த்தனை (சித்தார்த் குமார்) தடுக்க நினைக்கிற எண்ணமே நடிப்பின் சாட்சி...

ஹர்ஷ்வர்த்தன், பவேஷ் ஜோஷிக்குப் பிறகு நன்றாக நடித்துள்ள படம். பெரும்பாலும் உணர்ச்சிகளை அடக்கி வைத்து நடித்திருக்கிறார். சேத்னா இறுதிக்காட்சியில் செய்யும் செயல், அவள் நம்பும் நம்பிக்கைப் படி அமைக்கிறது என்று தான் கூறவேண்டும். 

வறண்ட நிலம் மனதிலுள்ள அனைத்து ஈரங்களையும் அழித்துவிடுகிறது. அங்கு மிஞ்சுவது வெறுமைதான். ஒன்றுமே இல்லாத வெறுமைதான். 

வெயில் காய்கிறது

கோமாளிமேடை டீம் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்