சட்டவிரோத வேட்டையைத் தடுக்க உதவும் மின் வாகனங்கள்!
விலங்கு வேட்டையைத் தடுக்கும் மின்வாகனங்கள்!
மொசாம்பிக் நாட்டின் தேசியப் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டுவரையில், இங்கு நடைபெற்ற சட்டவிரோத வேட்டைகளின் எண்ணிக்கை அதிகம். வனக்காவலர்கள் குழு, வேட்டைக் குழுக்களைத் தடுக்க இரவில் ரோந்து சென்றாலும் கூட நிலைமை மேம்படவில்லை.
இதற்கு முக்கியக் காரணம், வனக்காவலர்களின் பைக்குகள் தான். அவை இயங்கும்போது எழுப்பும் சத்தம் அதிகம். இதன் சத்தத்தை வைத்து வனக்காவலர்களின் நடமாட்டத்தை, வேட்டை கும்பல் எளிதாக அடையாளம் கண்டுகொண்டது. உடனே, தேசிய பூங்காவில் உள்ள பல்வேறு சதுப்புநிலங்கள், புதர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மறைந்து தப்பித்து வந்தனர். சாமர்த்தியமாக வன விலங்குகளை வேட்டையாட, வேட்டை நாய்களையும் பயன்படுத்தினர்.
சத்தமின்றி பாதுகாப்பு
ஆனால் இன்று வனக்காவலர்கள், சட்டவிரோத வேட்டையை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் கையாளும் இ பைக்தான் காரணம். ஸ்வீடனின் வாகன தயாரிப்பு நிறுவனம் கேக் (CAKE), வனக் காவலர்களுக்கு இ பைக்குகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிக ஒலி எழுப்பாமல் வேட்டைக்காரர்களை பிடிக்க முடிகிறது. வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, சதர்ன் ஆப்பிரிக்கன் வைல்ட்லைஃப் காலேஜ் (SAWC) எனும் தன்னார்வ அமைப்பு உதவி வருகிறது. கல்க் ஏபி என்ற இ பைக்கை, வனக்காவலர்களுக்கென வடிவமைக்க கேக் நிறுவனத்துடன், எஸ்ஏடபிள்யூசி அமைப்பும் கைகோத்துள்ளது.
நடப்பு ஆண்டில், துய்கெர் (Duiker), சுனி (Suni) ஆகிய விலங்குகளை வேட்டையாடும் முயற்சிகளை பூங்காவின் வனக்காவலர்கள் குழுவினர் தடுத்துள்ளனர். துய்கெர், சுனி ஆகிய விலங்குகள் பூங்காவில் உள்ள சிறுத்தை, மலைப்பாம்பு ஆகியவற்றுக்கு முக்கியமான உணவு. இயற்கையான உணவுச்சங்கிலியைத் தக்க வைக்க விலங்குகளை வேட்டையாடப்படுவதிலிருந்து காப்பாற்றுவது அவசியம்.
வேட்டைக்குத் தடை
ஆப்பிரிக்க தேசிய பூங்காக்களுக்கு மொத்தம் 50 இ பைக்குகளை கேக் நிறுவனம் வழங்கியுள்ளது. ”ரோந்து வாகனங்களுக்குத் தேவையான பெட்ரோலை ஹெலிகாப்டர் அல்லது சரக்கு வாகனத்தில் தான் கொண்டு செல்லவேண்டும். இதனை வேட்டைக்காரர்கள் அல்லது உள்ளூர் மக்கள் திருடவும் வாய்ப்புகள் அதிகம்” என்றார் கேக் நிறுவன இயக்குநர் ஸ்டெஃபான் யுட்டர்பார்ன்.
மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் இ பைக்கின் எடை, 80 கிலோ. வனக்காவலர்கள் சட்டவிரோத வேட்டைக்கு உதவும் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதோடு, நிதி உதவிகளையும் அளிக்கின்றனர். பாதுகாப்பு பணி, உள்ளூர் மக்களுக்கு உதவி ஆகியவற்றின் மூலம் வன விலங்குகளை காக்க வனக்காவலர்கள் முயன்று வருகின்றனர்.
saddle up with the power rangers
wired uk may 2022
https://www.electricvehiclesresearch.com/articles/24940/quiet-solar-powered-bikes-an-effective-tool-against-poaching
https://ridecake.com/en/anti-poaching/
கருத்துகள்
கருத்துரையிடுக