மகனின் ராணுவ வேலையை மௌனமாக நிராகரிக்கும் பாச அம்மா! யுவகுடு - கருணாகரன் - தெலுங்கு

 









யுவகுடு

சுமந்த், பூமிகா சாவ்லா

இயக்குநர் - ஏ.கருணாகரன்

திரைக்கதை - ரங்கராஜ், நந்தகோபால்

இசை - மணிசர்மா







சிவா, கல்லூரி படிப்பை விட தன் அப்பா ராணுவ வீரராக இருந்து உயிரை விட்ட ராணுவத்தில் சேருவதுதான் லட்சியம். இதை அவன் தன் வீட்டிலுள்ள அம்மாவுக்கு கூட சொல்லாமல் செய்கிறான். அம்மா பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் ஊட்டிக்கு கல்லூரி விடுமுறையை கழிக்க வருகிறான். அங்கே திடீரென சிந்து என்ற பெண்ணைப் பார்த்து காதலில் விழுகிறான். அவனுக்காக அந்த பெண்ணை தேடிப்பிடிக்க சிவாவின் ஆசிரியை அம்மா முயல்கிறார். அந்த தேடல் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் கதை. 

உண்மையில் இது காதலைச் சொல்லும் படம் கிடையாது. மற்றவர்களுக்காக நாம் படும் அக்கறை தான் முக்கியம். ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் அந்தளவு முக்கியமல்ல என்றே செய்தி இறுதியில் சொல்லப்படுகிறது. 

பிற தெலுங்கு படங்களை விட இந்த படம் வேறுபடுவது, காதலை சொல்லுகிற அல்லது இதுதான் காதல் என நினைத்துள்ள ஊகத்தனமாக விஷயங்களை உடைப்பதுதான். 

சிந்துவின் பாத்திரமே வித்தியாசமானது. அவள் இறுதிவரை சிவாவை காதலிக்க காரணங்கள் ஏதுமே இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு காட்சியில் சிவா, காதல் ஆவேசத்தில் அவளை அணைக்கிறான். அப்போது அவள் மெல்ல அழத் தொடங்குகிறாள். சட்டென காதல் வேகம் குறைந்து, குற்றவுணர்வுக்கு ஆட்படும் சிவா மெல்ல வீட்டைவிட்டு வெளியே செல்கிறான். பெய்யும் மழையில் நனைந்தபடியே தான் செய்தது தவறு என தன்னையே திட்டிக்கொண்டு வருத்தப்படுகிறான். இத்தனைக்கும் நான் சொல்லும் காட்சியின்போது இருவருக்கும் மணமாகி இருக்கும். ஆனால் அது காதலுக்காக நடக்கவில்லை என்பதுதான் ட்விஸ்ட். 

சுமந்தைப் பொறுத்தவரை அவன் காதலிக்கும் பெண்ணை நகரத்தில் சந்திக்கிறான். பரவசப்படுகிறான்.ஆனால் அந்த பெண்ணுக்கு அவன் பெரிதாக கவர்ச்சியாக படுவதில்லை. அவளுக்கு உணர்வு ரீதியாக தன்னைத் தாங்கிக்கொள்ள ஒரு துணை தேவை. இறந்துபோன அவளது அம்மாவைத் தான் அவள் தேடுகிறாள். அதை அடையாளம் காண்கின்ற நபர் தான், சிவாவின் ஆசிரியை அம்மா. 

அப்பாவிடம் ஊட்டியில் சிந்து பேசுவது, தன் அம்மா நினைவாக வைத்திருந்த ஒரே ஒரு போட்டோவையும் ஸ்டுடியோவில் தொலைத்துவிடும்போது கோபமாகி கத்துவது, படத்தின் இறுதிப்பகுதியில் தனது அப்பாவின் இரண்டாவது திருமணத்தில் விருந்தினராக பங்கேற்பது, கூட ஒருத்தர் இருந்தால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு அதான் உன்னைக் கூப்பிட்டேன் என தனது கணவனான சிவாவைப் பார்த்து சாலையில் பேசும் காட்சி என சினிமாவில் வலுவான காட்சிகள் என சொல்ல நிறைய உண்டு. வேணு மாதவின் காட்சி தனியாக இணைக்கப்பட்டது போல தோன்றுகிறது. 

சுமந்திற்கு தான் காதலிக்கும் பெண் பார்க்க அழகாக இருந்தாலும் தன் உணர்வை புரிந்துகொள்ளாதவள். ஆனால் அவனின் அம்மாவுக்கோ அதே பெண் பாசத்திற்கு ஏங்குபவள், நல்லவள். அவள்தான் தனது மகனுக்கு பொருத்தமானவள் என நம்புகிறாள். சிந்துவைப் பொறுத்தவரை அவளுக்கு ஆசிரியை தான் சிவாவின் அம்மா என்பது தெரியாது. அவளுக்கு ரத்த உறவு நெருக்கம் இல்லாத போதும், தனக்கு அம்மா கிடைத்துவிட்டாள் என்பதே நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காகத்தான் ஆசிரியையின் மகனை திருமணம் செய்துகொள்ள புகைப்படம் பார்க்காமல் கூட சம்மதிக்கிறாள். அவளுக்கு அம்மா நல்ல குணமுடையவள், மகனும் அதே குணக்கூறுகளோடு இருப்பான் என நம்புகிறாள். ஆனால் சிவா, தான் ஊட்டியில் பார்த்து காதலித்த பெண், தனக்கு சரியானவளல்ல என முடிவுக்கு வருகிறான். இதனால் அம்மா அதே பெண்ணை மணம் செய்ய கூட்டிவரும்போது அவள் எதற்கு தன்னை நிராகரிக்கவேண்டும். தானே நிராகரிப்போம் என கல்யாணம் வேண்டாம் என கூறிவிடுகிறான். இதுதான் படத்தின் முக்கியமான திருப்புமுனை. 

இறுதியில் சொல்லும் விஷயம் தேசப்பற்றுக்கானது. ஆனாலும் பார்க்க நன்றாக இருக்கிறது. தேசப்பற்றும், குடும்ப பாசமும் என இரண்டுமே முக்கியமானது என ஆசிரியை குண்டு வெடிப்புகளிலிருந்து பாடம் கற்பது முக்கியமானது. 

தெளிவான இளைஞன் தான்!

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்