கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

 














சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்!

இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல். 

குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம் அரசு நிதி பெற்று மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்களையும், குடிநீர் பம்புகளையும்  உருவாக்க முடிகிறது. 

1997 - 2000 காலகட்டத்தில் நர்மதா, பாருச் ஆகிய இரு மாவட்டங்களிலும் மக்களோடு இணைந்து 300 ஏக்கரில் 90 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். வனத்துறையின் ஆதரவுடன் செய்த, இச்செயல்பாடு மூலம்  அங்கு நிலத்தடி நீர் அதிகரித்து வருகிறது. விவசாயிப் பெற்றோர்களுக்கு பிறந்த நீதா படேல், கிராம மேலாண்மை படிப்பை நிறைவு செய்துள்ளார்.

https://www.thebetterindia.com/275852/gujarat-neeta-patel-water-champion-villages-water-shortage-builds-dams/

https://shesightmag.com/2022/02/21/meet-the-water-champion-of-gujarat-whose-innovations-help-230-villages-conserve-water/

கருத்துகள்