எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி
சமரசிம்ஹா ரெட்டி
பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி
இயக்கம் - ஜி கோபால்
கதை வி விஜயேந்திர பிரசாத்
வசனம் பாருச்சி பிரதர்ஸ்
இசை மணிசர்மா
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.
அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.
மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்கதை. இன்னொரு கதை இருக்கிறது. ராயலசீமாவில் வீர ராகவ ரெட்டி என்ற நிலக்கிழார், ரௌடி இருக்கிறார். இவர் சமர சிம்ஹா ரெட்டி என்பவரை கொல்ல வன்மத்தில் துடிக்கிறார். இதற்காக தனது இரு மகன்களையும் அனுப்பி வைக்கிறார். அவர்கள் அப்படி சமர சிம்ஹாவை கொல்லாவிட்டால் அவர்களது இரு மனைவிகளும் வெள்ளைப் புடவைதான் கட்டியிருக்கவேண்டும் என மிரட்டுகிறார். அந்த சமர சிம்ஹா ரெட்டி யார் என்று பார்த்தால் அந்த புகைப்படத்தில் அப்புலு இருக்கிறார். இந்த மர்மத்தை மெல்ல அறிந்துகொள்ள படத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.
பாலைய்யா படத்தில் சமரசிம்ஹா ரெட்டி அப்படியொன்றும் மோசமில்லை என்று சொல்லலாம். பாலைய்யாவின் நடிப்பு, உணர்ச்சிகரமான காட்சிகள், பழிக்குப்பழி, ஜெயப்பிரகாஷ் ரெட்டியின் வன்மம், இறுதிவரை மாறாத அவரது குணம் என படத்திற்கு வலுசேர்க்கும் பாருச்சி பிரதர்ஸின் வசனங்கள் என அனைத்துமே மிகச்சிறப்பாக இணைந்த படம்தான் இது. படத்தின் சண்டைகளுக்கும், நெகிழ்ச்சியான காட்சிகளையும் டெம்போ ஏற்றி நரம்புகளை முறுக்கேற்றுகிறது மணி சர்மாவின் இசை. சண்டையில் அவர் உருவாக்கியுள்ள மெல்லிசை, சண்டையிடுவதை பார்க்கும் நமக்கு கொண்டாட்டமான நிகழ்ச்சியாக்குகிறது. இந்த படம் அந்த காலகட்டத்தில் கதையில் மட்டுமல்ல இசையில் கூட பரிசோதனை முயற்சிகளைக் கொண்டுள்ளது.
பப்லு பிரிதிவிராஜ் தான் படத்தில் முக்கியமான பாத்திரம். இவர்தான் படத்தின் திருப்புமுனை, இவர் இறந்துபோவதும், அப்போது வாங்கிக்கொள்ளும் சத்தியமும்தான் சமரனை வேறுபட்ட மனிதனாக மாற்றுகிறது. பல கோடி ரூபாய் சொத்திருந்தும் கூட டாக்ஸி ஓட்டுவதும், நள்ளிரவில் பாஸ்ட் ஃபுட் கடை நடத்துவதுமாக அவரை மாற்றுகிறது. மூன்று பெண் பிள்ளைகளையும் நல்லபடியாக கல்யாணம் செய்துகொடுக்க படிக்க வைக்க உழைக்கிறார். நல்ல நண்பனை தவறுதலாக தான் செய்த காரியம் அழித்துவிட்டது என்ற குற்றவுணர்ச்சி அவருக்கு உண்டு. இந்த இடத்தில் தான் படிக்காத அவரது தந்தையின் ஆவேசத்தை சமரன் வெல்கிறான். இதனால் தான் வீர ராகவ ரெட்டியின் மகன்களை கூட எந்த நிலையில் அடித்து காயப்படுத்துகிறானே ஒழிய கொல்லுவதில்லை. வீர ராகவ ரெட்டியைக் கூட வலது கையையும் இரு கால்களையும் வெட்டிப்போட்டுவிட்டு உயிரோடு விடுகிறான்.
இறுதியில் பாலைய்யா பேசும் வன்முறைக்கு எதிரான வசனம் முக்கியமானது. அவரது குடும்பமே பகை வன்மம் காரணமாக மறைந்து போனாலும் இரு குடும்பத்தினரின் காரணமாக மக்கள் சண்டை போடுவது சரியல்ல என்று போடுவது என உணர்ச்சிகரமாக பேசுவது சிறப்பான வசனம்.
காதல், குடும்ப படங்கள் வெளிவந்த காலத்தில் முழுக்க இரு குடும்பங்களுக்கு இடையிலான பகையை மையமாக வைத்து வந்த படம் இது. மகத்தான வெற்றி பெற்று மாநில அரசின் நந்தி விருது பெற்றது.
ரத்தத்தால் எழுதப்பட்ட வன்முறை கூடாது என்ற போதனை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக