உடன்பிறவாத தம்பி சாகரின் குடும்பத்திற்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் திருடன் பிரபு! பலேவாடி பாசு - பாலைய்யா, ஷில்பா, அஞ்சலா











பலேவாடி பாசு
பாலகிருஷ்ணா, ஷில்பா ஷெட்டி, அஞ்சலா ஜாவேரி
இயக்கம் - பி.ஏ. அருண் பிரசாத்
இசை - மணி சர்மா





காட்டிலாகா அதிகாரியாக சாகர் அவர் வண்டி ஓட்டுநர் புதிதாக வந்து சேர்கிறார்கள். பழங்குடி மக்களுக்கு பல்வேறு குடியிருப்புகள், கல்வி, கணினி, டிவி வசதிகளை செய்து தருகிறார் சாகர். இதனால் மக்கள் அவரை வாழும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அங்கு சுனிதா என்ற இளம்பெண் வருகிறார். அவர் சாகர் என்ற பெயரில் அங்கு வேலையில் இருப்பவர், மோசடிக்காரர் என குற்றம்சாட்டுகிறார். அப்போதுதான் சாகர் என்பவர் யார் என அனைவரும் அறிகிறார்கள். உண்மையில் சாகர் என்ற பெயரில் அங்கு வேலை செய்பவர் யார் என்பதை பழங்குடி மக்களோடு நாமும் அறிவதுதான் கதை. 

பாலைய்யாவின் குறையாத எனர்ஜிதான் படத்தைப் பார்க்க வைக்கிறது. படத்தில் பழங்குடி பெண்ணாக பிரிட்டிஷ் பெண் அஞ்சலாவை, லக்மே லிப்ஸ்டிக் கூட கலைக்காமல் ஜிலு ஜிலு உடை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது? அவர் இல்லையென்றால் படத்தில் பாடல்களை எப்படி வைப்பது? லாஜிக் தானே? நிறைய லாஜிக் பார்த்தால் மேஜிக் மிஸ் ஆகிவிடும்.  படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உண்டு. யானைகளின் வயிற்றில் ஐ லவ் யூ என்று ஷில்பா ஷெட்டி சொல்லும் காட்சி... அம்மம்மா... இந்த காட்சியும் அவர் நகரத்தில் பிக்பாக்கெட், பணத்தை கொள்ளையடிக்கும் பொறம்போக்கு என தெரிந்தபிறகு வரும் காதல்... இப்படி நினைத்தாலே மயிர்க்கூச்செறியும் காட்சிகள் உண்டு. 





நகரத்தில் திருடர்களாக இருக்கும்  பிரபு என்ற பா
லைய்யாவும் அவரது நண்பரும் சாகர் என்பவர் மூலம் பாசத்தை முதன்முறையாக அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்களை கடந்தகால சிக்கல்கள் துரத்துகின்றன. இதனால் போலீசில் கொலைக்குற்றம் ஒன்றுக்காக கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்படும் நிலையில் தப்பி காட்டுக்குள் ஓடுகின்றனர். அவர்கள் பொய்சாட்சி சொல்லி அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சாகரின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் தவறான வழி என்பது, அவர்களை பிரச்னைக்குள்ளாக்குகிறது. 

அப்போதான் காட்டில் ஜீப் ஒன்று மரத்தில் மோதி நிற்பதை கவனிக்கிறார்கள். அங்கு வந்து பார்த்தால் தனது தம்பி என நினைத்த சாகர் இறந்து கிடக்கிறான். அவன் குடும்பம் வறுமையில் இருப்பதால், தானே சாகராக இருந்து பணியேற்ற பிரபு நினைக்கிறான். அப்படி காட்டுக்குப் போகும்போது அங்கு நடைபெறும் விஷயங்கள் தான் மீதிக்கதை. சாகரைக் கொன்றது யார், பிரபு மற்றும் அவரது நண்பரை சிறைக்குள் தள்ள முயலும் இன்ஸ்பெக்டரின் வன்மம் தீர்ந்ததா, சாகர் இறந்த செய்தியை பிரபு சாகரின் அம்மாவுக்கு எப்படி சொன்னார் என்பதை இரண்டு நாயகிகளின் பாடல்களுக்கு இடையில் கிடைக்கிற நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். 




இரண்டு நாயகிகளிலும் அஞ்சலா தான் பாசம்,நேசம், பண்பு என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறார். என்ன காட்டில் வளர்ந்த பெண் என்பதாக காட்டுவதால் சற்று முரட்டுத்தனமான அன்பு.... படத்தில் பிரகாஷ்ராஜ் இருக்கிறார். தொடக்கத்திலும் இறுதி சண்டைக்காட்சியிலும் வருகிறார். அவர் நடிப்பதற்கான இடமே குறைவு. எவ்வளவு கொடூரமான மனிதர் என முதல் காட்சியில் சொல்லிவிட்டு அத்தோடு அந்த பாத்திரத்தை மறந்துவிடுகிறார்கள். 

காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதோடு, இறந்துபோன தம்புடு சாகர் கொலைக்கும் பலி வாங்கி அதற்கு பரிசாக சாகரின் குடும்ப ரேஷன் கார்டில் தன்னை சேர்த்துக்கொள்கிறான் பிரபு. 

மஞ்சிக்கு மஞ்சு பன்சுக்கு பன்ச்சு!

கோமாளிமேடை டீம் 







கருத்துகள்