வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை
மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது.
முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.
மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.
தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்தார். இதன் வழி தான் இந்தியா பிரிட்டிஷாருக்கு அடிமையான கதையும் தொடங்குகிறது. வரலாற்றுக்கு ஒரு கதவு மட்டுமல்ல. பல கதவுகள் உண்டு. அவை எப்போது திறக்கும் என்பது காலத்திற்கே தெரியும். இவை வாசனைப் பொருட்களாக சமையலுக்கு மட்டுமல்ல மருத்துவத்திலும் பயன்பட்டன. சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தை உள்ளாகவும், வெளியாகவும் பயன்படுத்துவது உண்டு. இதற்கென தனி அளவு முறைகள், பயன்படுத்தும் நுட்பம் உண்டு.
மஞ்சள்
வட இந்தியாவில் மஞ்சளுக்கு ஹால்தி என்று பெயர். ஹாரிதா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து ஹால்தி உருவானது. உலகளவில் மஞ்சள் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. சீனாவிலும் மருத்துவப் பயன்பாட்டில் முக்கியமான இடம் பிடித்துள்ளது. இதனை சுஸ்ருதர் எழுதிய நூலில் காயங்களுக்கு மருந்தாகவும், உணவில் நச்சுத்தன்மையை முறிக்கும் தன்மை கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயன்பாடு
ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் முக்கியமான பொருள். உணவு செரிமானம், பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு மஞ்சளை உணவில் பயன்படுத்துகிறார்கள். வெளிப்புற பயன்பாடாக காயங்களுக்கு பூசுகிறார்கள். நோய்த்தொற்றைத் தடுக்கிறது. திருமண சடங்கில் மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் மஞ்சளை உடலில் பூசுவது வழக்கம். நீண்ட நாட்களுக்கு திருமண ஜோடி இணைந்து வாழவும், அவர்களை தூய்மை செய்யவுமாக மஞ்சள் உதவுகிறது. நிறம், மணம், சுவை ஆகிய காரணங்களுக்காக தெற்காசியா மத்திய தரைக்கடல் பகுதிகளில் மஞ்சளை உணவில் சேர்க்கிறார்கள்.
லவங்கப்பட்டை
இலங்கை, இந்தியா, வங்கதேசம்
சீனாவில் கி.மு 2800 ஆண்டுகளிலேயே லவங்கப்பட்டை பயன்பாட்டில் இருந்துள்ளது. அப்போதே சீனாவில் இருந்து கிரேகத்திற்கு இறக்குமதி ஆகியுள்ளது. லவங்கப்பட்டையின் தாயகத்தை தேடினால் இலங்கை, இந்தியா, வங்கதேசம் என மூன்று நாடுகளைக் கூறவேண்டும். சீனாவில் லவங்கப்பட்டை அரசர்களுக்கு, முக்கியமான விருந்தினர்களுக்கு மதிப்புக்குரிய பரிசாக வழங்கப்பட்டது.
கி.மு 7 ஆம் நூற்றாண்டில் கிரேக்க கவிஞர் சாபோ இதை தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கிரேக்கத்தை சேர்ந்த ஹெரோடோடஸ், அரபு நாடுகளில் லவங்கம் விளைந்ததாகவும் அதனை பாம்புகள் காவல் காத்ததாகவும் கூறியுள்ளார். லவங்கப்பட்டையில் சின்னமோலோகஸ் எனும் பறவை கூடுகட்டியதை சொன்னவர் வேறு யாருமில்லை. அரிஸ்டாட்டில்தான். மத்திய காலத்தில் லவங்கப்பட்டையை வெள்ளியை விட முக்கியமான பொருளாக மதித்தனர்.
பயன்பாடு
இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கான மருந்து என லவங்கப்பட்டையை கருதி பயன்படுத்தினர். உணவு, மருத்துவம் தாண்டி லவங்கத்தை எகிப்து மம்மிகளை பதப்படுத்த பயன்படுத்தினர். லவங்கப்பட்டையின் மணம், காரம் காரணமாக இறைச்சியை பதப்படுத்த பயன்படுத்தினார். பாரம்பரிய மருத்துவத்தில் இதனை செரிமானம் சீராகவும் பயன்படுத்தினர்.
ஜியோகிராபிகல் ஆசியா இதழ்
images - Goodhousekeeping
கருத்துகள்
கருத்துரையிடுக