மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்!
கல்வியறிவின்மையை தீர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டேராடூனில், கல்வியின்மையை எதிர்த்து போராடி வருகிறார் அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜீவ் பந்திரி. மாணவர்களுக்கு நேரடி வகுப்பிலும், ஆன்லைனிலும் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.
பவுரி மாவட்டத்தில் உள்ள நௌகான்கல் கிராமத்தில் பிறந்தவர், ராஜீவ். அரசுப்பள்ளி ஆசிரியராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருகிறார். 2009ஆம் ஆண்டு முதல் டேராடூன் மாவட்டத்தில் கல்ஜ்வாடியில் உள்ள பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இன்றுவரையில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்.
பணிநேரம் முடிந்ததும், ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கிறார். சில மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்றும் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகிறார். பொருளாதாரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்தும் வருகிறார்.
“நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் பொருளாதாரப் பிரச்னை இருந்தது. என்னுடைய மாணவர்களின் பிரச்னைகளை என்னால் தீர்க்க முடிந்தால், அவர்கள் கல்வியை மனப்பூர்வமாக கற்பார்கள் என நம்புகிறேன்” என்றார் பந்திரி. மாநில அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றுள்ளவரை, மாணவர்கள் குருஜி என்றுதான் அழைக்கிறார்கள்.
பவுரியில் உள்ள பாவோ எனும் இடத்தில் உள்ள அரசுப்பள்ளியில், ஆசிரியப் பணியைத் தொடங்கினார் பந்திரி. அப்போது, பள்ளியில் 15 மாணவர்கள்தான் இருந்தனர். இவ்வளவு குறைந்த மாணவர்களா என அதிர்ச்சியடைந்தவர், பிரச்னைகளைத் தீர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை 200ஆக உயர்த்தினார்.
ஏழை மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்களை வாங்க ராஜீவ் பந்திரி தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிதி திரட்டி உதவினர்.இதனால் தான் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. ”மாணவர்களுக்கு கல்வி முக்கியம். அதுதான் அவர்களின் வாழ்க்கையை எதிர்காலத்தில் சிறப்பாக்கும். இந்த மாணவர்கள் நாட்டின் பொக்கிஷங்கள்’ என்றார் ஆசிரியர் ராஜீவ் பந்திரி.
Images - freepik
கருத்துகள்
கருத்துரையிடுக