வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

 

















தெரியுமா?

சிவப்புநிற பனி!

துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். 

பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை. 

டைனோசர் தூக்கம்

டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு நெருங்கிய தொடர்புகொண்ட உயிரின படிமம் கிடைத்தது. இதற்கு, ட்ரூடான்டிட் டெரோபாட் (Troodontid theropod)  என்று அகழ்வாராய்ச்சியாளர்கள்  பெயர் சூட்டியுள்ளனர். 

இந்த விலங்கின் படிமம், படுத்துள்ள நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.  பறவைகள் தான் இந்த நிலையில் உறங்கும். அப்போதுதான் தலையில் உள்ள வெப்பத்தை தக்க வைக்க முடியும். வெப்ப ரத்தம் கொண்ட உயிரினங்கள் இப்படி உறங்குகின்றன. பறவை போன்ற டைனோசரைப் பார்த்தால், அதிலும் வெப்ப ரத்தம் கொண்ட உயிரினங்கள் சில இருந்திருக்கும் என அகழ்வராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.


பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மார்ச் 2022

https://www.livescience.com/antarctica-bleeds-watermelon-snow.html

https://www.sciencefocus.com/planet-earth/how-did-dinosaurs-sleep/


கருத்துகள்