குடிநீர் தேடி அலையும் விலங்குகளுக்கு உதவும் சூழல் மனிதர் - ராதாஷ்யாம் பிஷ்னோய்

 










விலங்குகளின் குடிநீர் தாகம் தீர்க்கும் மனிதர்! 

ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வாழும் விலங்கினங்களுக்கு கோடைக்காலம் கடினமானது. அப்போது, நீர்வேட்கையில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துதான் தாகத்தை தணித்து வந்தன. தற்போது, அப்படி அலையும் விலங்குகளுக்காக குளங்களில் நீரை நிரப்பி வருகிறார் சூழலியலாள் ராதேஸ்யாம் பிஷ்னோய். 

ராஜஸ்தானின் தோலியா கிராமத்தைச் சேர்ந்தவர், பிஷ்னோய். இனிப்புகளில் சேர்க்கப்படும் கோயா எனும் பால் பௌடரைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார். காயம்பட்ட விலங்கினங்களை மீட்டு சிகிச்சை அளிப்பதோடு, அவற்றைப் பாதுகாப்பது பற்றிய பிரசாரத்தையும் செய்து வருகிறார். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடைக்காலமான  ஏப்ரல், ஜூன் மாதங்களில் விலங்கினங்களுக்காக குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளைச் செய்து வருகிறார். தோலியா கிராமத்தோடு அருகிலுள்ள  கேடோலி கிராமத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார்.  இதன் மூலம், பாலைவன  நரி, பூனை, சின்காரா மான், கழுகுகள் ஆகியவை பயன்பெற்று வருகின்றன. ”2017ஆம் ஆண்டு நீர்தேடி அலைந்து திரிந்த 17 சின்காரா மான்கள் இறந்து போயின.இந்த சம்பவமே விலங்குகளுக்கு உதவி செய்ய என்னைத் தூண்டியது” என்றார் பிஷ்னோய். 

தனது நிலத்தில் உள்ள ஆழ்துளைக்கிணறு மூலம் பெறும் நீரைக் கொண்டு குளங்களை  வாரத்திற்கு இருமுறை நிரப்பி வருகிறார். இதற்கென, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்துகிறார். ”இரவில் தான் விலங்குகள் சுதந்திரமாக நீர் குடிக்க வரும் என்பதால் மாலை நேரத்தில்  குளங்களை நிரப்பி வருகிறேன் ” என்றார் பிஷ்னோய்.

காடுகளுக்கு அருகில் வாழும் மக்களுக்கு, எளிதில் தூக்கிச்செல்லும்படியான  நீர் கேன்களை வழங்கியிருக்கிறார் பிஷ்னோய். இதன் கொள்ளளவு 40- 150 லிட்டர் ஆகும். நகராட்சி வழங்கும் குடிநீரை இதில் பிடித்து வைத்து விலங்குகளுக்கு  வழங்கலாம் என பிஷ்னோய் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். 


 

டவுன் டு எர்த் 16 மே 2022

return of oasis (suchita jha)

downtoearth 16 may 2022


கருத்துகள்