மார்பிங் செய்து உருவாக்கிய மாடல் பெண் உண்மையில் வந்தால்.... தக்கராக தூரங்கா.. - தெலுங்கு

 



















தக்கராக தூரங்கா
சுமந்த், வேதிகா
இயக்குநர் ரவி சாவலி
இசை  ரகு குஞ்சே









தூரமாக இருக்கும்போது இருக்கும் காதல், அருகே இருக்கும்போது பெருகியதா, வற்றியதா என்பதே ஒருவரிக் கதை. 


கௌதம், விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கிறார். அவருக்கு மாடலாக ஒரு பெண் தேவைப்படுகிறார். ஆனால் அவருக்குத் தேவைப்படும் பெண் கிடைக்கவில்லை. இதனால், பல பெண்களின் முகத்தில் உள்ள உருப்படியான பாகங்களை எடுத்து மார்பிங் செய்து பெண் ஒருவரை உருவாக்கி காமாட்சி என பெயர் வைக்கிறார். அவரை இப்படித்தான் இந்த மாடலை உருவாக்கினேன்  என்று சொல்லி விளம்பர ஏஜெனசி ஓனரை கன்வின்ஸ் செய்கிறார். 

மார்பிங் செய்த பெண்ணின் உருவத்தில் நிஜமாகவே ஒரு பெண் விசாகப்பட்டினத்தில் வாழ்கிறார். இந்த விளம்பரங்களால் அந்த பெண்ணின் கல்யாணம் நின்றுபோகிறது. அதற்கு காரணம் கௌதம் என தெரிந்து அவனைத் தேடி வருகிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளால் இருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. உச்சபட்சமாக தீவிரவாத குழு வேறு இருவரையும் தேடுகிறது. கௌதம், மீனாட்சி என இருவரும் காதல் கொண்டார்களா, இல்லையா என்பதே கதை. 

முக்கியமான கதை என்பது கௌதம் கிராபிக்ஸில் உருவாக்கும் பெண் காமாட்சியை அப்படியே கற்பனையாக நினைத்து காதலிக்கத் தொடங்குகிறான். அதேபோல ஒரு பெண் நிஜத்தில் வந்து நிற்கும்போது, அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடிவதில்லை. சூழல் சிக்கலாக இருவரும் தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என காவல்துறையின் புரிந்துகொண்டு துரத்துகிறார்கள். இடையில் ஆந்திராவில் பாம் வைக்கும் பாக் தீவிரவாதிகள் தங்களைப் பற்றி மீனாட்சியிடம் இருக்கும் சிடியைக் கைப்பற்றி அவளையும் கொல்ல கொலைவெறியோடு துரத்துகிறார்கள். கௌதமுக்கு மீனாட்சி மேல் காதல் இருந்தாலும் சொல்ல முடியாத சூழல். மக்களை வேறு குண்டுவெடிப்பிலிருந்து காக்கும் பொறுப்பு தோள் மேல் வந்து சேர, என்ன செய்கிறார் என்பதே இறுதிக்காட்சி. 

காதல் கதையாக தொடங்கி தேசப்பற்று படமாக முடிகிறது. மக்களே தீவிரவாதியை அடித்துக்கொல்வது , அதற்கு காவல்துறை இன்ஸ்பெக்டரே அமைதி காத்து ஒப்புதல் தருவது, மக்களை குழு படுகொலைக்கு வெறியேற்றும் காட்சி என இயக்குநர் இஷ்டத்துக்கு விஷமக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். 

மூன்று வில்லன்களில் பாமை வயிற்றில் கட்டிய வில்லனோடு சுமந்த் போடும் சண்டை, கடற்கரையில் குழந்தைகள் கட்டிபுரண்டு விளையாடுவது போல இருக்கிறது. வில்லனை இறுதியில் ரயில் பெட்டியில் தள்ளி வெடிக்க வைக்கிறார். ஆக மொத்தம் வில்லனின் நோக்கம் நிறைவேறுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் பாம் வெடித்தாயிற்று... இதில் மக்களை காப்பாற்றுவது எங்கே வருகிறது.....

இதில் மீனாட்சி பாத்திரத்தை என்னவென்று வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள சரி என்று சொல்லும் பெண்ணுக்கு போன் செய்து சம்மதம் வேறு கேட்கிறார்கள். இதில், கௌதமை தொடாமல் அவர் மாங்காய் பறிக்கும் காட்சியை எந்த லாஜிக்கில் சேர்ப்பது என தெரியவில்லை. கிளுகிளுப்பான காட்சி தான் அது. 

ஒருவழியாக தன் காதலை வேதிகாவே (மீனாட்சி) சொல்லி படத்தை முடித்துவைக்கிறார். இதற்குள் நாம் ரகு குஞ்சே இசையில் நிறைய டூயட்டுகளையும் பார்த்துவிட்டோம். நம் மனசு வருத்தப்படக்கூடாதே என்பதற்காகத்தான் காதல் ஒன்றாக சேருகிறது. மற்றபடி அதில் எந்த ஆச்சரியமும் உற்சாகமும் நமக்கு வருவேனா என்கிறது.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்