நண்பர்களோடு ஜாலியாக பழகிவிட்டு திடீரென காணாமல் போகும் ஒற்றை நண்பன்! - டியர் ஃபிரெண்ட் -


 









டியர் ஃபிரண்ட்

டோவினோ தாமஸ், தர்ஷனா ராஜேந்திரன்




கோவாவில் சந்தித்து சிலருக்கு நெருக்கமாகும் ஒருவன் தான், ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்குவதற்கு ஊக்கம் கொடுக்கிறான். அந்த குழுவில் உள்ள நண்பன் ஒருவனுக்கு கல்யாணம் செய்துகொள்ளவும் உதவுகிறான். குழுவில் உள்ள ஒவ்வொருவரின் தேவைக்கும் அவனிடம் தீர்வும், சோகங்களுக்கு தோளும் தருகிறான். இப்படி இருக்கும் நண்பன் ஒருநாள் காலையில் திடீரென காணாமல் போகிறான். அவனைத் தேடி அலையும் நண்பர்கள் அவனைப் பற்றி மோசமான செய்திகளைக் கேள்விப்படுகிறார்கள். அதை அவர்கள் நம்பினார்களா, அவனது வாழ்க்கை என்னவானது என்பதே கதை. 

பொதுவாக வாழ்க்கையில் நாம் பெறும் நண்பர்கள், அல்லது கிடைக்கிற நண்பர்கள் பிரியும் போது நாம் யோசிப்பது பொருளாதாரம் சார்ந்தும், உணர்ச்சிகள் சார்ந்தும்தான். பிரிவு இந்த இரண்டு விஷயங்களையும் யோசிக்க வைக்கும். டியர் ஃபிரெண்ட் படத்திலும் அதுதான் நடைபெறுகிறது. 





இதில் டோவினோ தாமஸ் இருக்கும் குழுவிலேயே பயங்கர ஆக்டிவிட்டியான ஆள். எந்த பெண்ணும் விரும்புகிற அளவுக்கு கவர்ச்சிகரமானவன் தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை பணம் தான் முக்கியம். அதற்காகவே பலரிடமும் நெருக்கமான நண்பனாக பழகி பேசி திட்டங்களை தொடங்கி நல்ல நாள் பார்த்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவது வழக்கம். கொல்கத்தா, மும்பை என பல்வேறு இடங்களிலும் இதே வேலைதான். பெங்களூருவில் வந்து மலையாளி நண்பர்களோடு சேர்ந்து வாழ்கிறான். ஒரு வீட்டில் வாழும்போது, ஸ்டார்ட் அப் ஐடியா சொல்லி அதற்கான நிதி ஆதாரங்களை தேடுகிறார்கள். அதுவும் கிடைக்கிறது. பத்து லட்ச ரூபாயை அறை நண்பன் போடுகிறான். அப்படி போட்டு மேம்படுத்திய ஐடியாவிற்குத்தான் 1 கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. இந்த சூழலில் தான் டோவினோ தாமஸ் காணாமல் போகிறார். 

இந்த சூழலில் தான் தர்சனாவுக்கும் அவரது காதலனுக்கும் திருமணமாகிறது. இதற்கான தைரியத்தையும், துணிச்சலையும் தருவது டோவினோதான். இதனால் யாரையும் விட தர்சனாவிற்கு டோவினோ தாமஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதை நீங்கள் நண்பனாக என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். டோவினோ காணாமல் போனவுடனே தர்சனா தான் அதிகம் நொறுங்கிப் போகிறாள். அவன் யார் என மெல்ல அறிந்துகொள்ளும்போது பலருக்கும் அவன் மீதான நம்பிக்கை மெல்ல உடைந்து நொறுங்கி சரிகிறது. இப்படி ஏமாற்ற என்ன காரணம் என தேடுவதுதான் நண்பர்களின் யோசனை. 

டோவினோ தன் அம்மா பற்றியும். அவளை இழந்தபிறகு மனநிலை பாதிக்கப்பட்டது பற்றி பேசுவது அற்புதமான காட்சி. அதை அவன் தர்சனாவிடம் தான் கூறுவான். மேலும் பாரில் அம்மா இறந்த தினத்தன்று ஜூசில் மதுவைக் கலந்த நண்பனை கோபமாக அடித்து தள்ளிவிட்டு வெளியே வரும் காட்சி சிறப்பானது. எங்கேயும் இவன் இப்படித்தான் என கூறவே முடியாது. அப்படி நடித்திருப்பார் டோவினோ. படத்தை பார்த்தால்தான் உங்களுக்கு காட்சிகளின் வீரியம் புரியும். 

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்