சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி
சீதாராமம் - தமிழ்
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்
இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி
இசை - விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத்
தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.
இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது. இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.
இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்திய அதிகாரி ஒருவரின் காரை மதுபான பாட்டிலால் உடைத்து தீ வைத்து கொளுத்துகிறாள். இதனால் அந்த அதிகாரியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது சேதப்படுத்திய காருக்கு இழப்பீடாக பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்.
இதற்கு அஃப்ரின் மறுப்பு தெரிவிக்கிறாள். அவள் இந்தியாவை, இந்துக்களை தீவிரமாக வெறுக்கிறாள். தாத்தா தாரிக்கின் விருப்பத்தை நிறைவேற்ற வேறுவழியின்றி இந்தியாவுக்கு வருகிறாள். அங்கு அவளுக்கு பாலாஜி என்பவர் உதவுகிறார். யார் சீதா மகாலட்சுமி என பல்வேறு இடங்களிலுள்ள மனிதர்களைத் தேடிப்போக சீதா, ராம் ஆகியோரின் கதை மெல்ல சொல்லப்படுகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் லெப்டினென்டாக இருக்கும் ராம், நிதானமாக யோசித்து விஷயங்களை செய்பவன். இவன் மேலதிகாரி அந்தளவு புத்திசாலியல்ல. சுயநலவாதி.
இருவருக்கும் இடையில் நல்ல உறவு இருப்பதில்லை. விஷ்ணு எனும் அதிகாரி, ராமின் செயல்பாடுகளால் பொறாமையால் மனதுக்குள் புழுங்குகிறார். இந்த எண்ணம் படத்தின் பின்பகுதியில் பெரிதாகும்போது என்னாகிறது எப்படி பிறரின் வாழ்க்கையை அழிக்கிறது என்பதே கதை.
இதில் இன்னொரு கதை, ராம் காஷ்மீரில் வாழும் இந்துகளை முஸ்லீம் கலவரக்கார ர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். இதனால் நாடெங்கும் இருந்து அவனது ராணுவப்பிரிவுக்கு பாராட்டுகள் குவிகிறது. அதில் வரும் கடிதம் மிகவும் நெருக்கமான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, ராமை கணவனாக கருதி.... இதனால் ராமுக்கு குழப்பமாகிறது. பொதுவாக அண்ணன், தம்பி என குடும்பத்தில் ஒருவராக கருதி கடிதம் எழுதுவது வழக்கம். ஆனால், கணவனாக கருதி கடிதம் எழுதும் பெண் புதிதாக தோன்றுகிறாள். அனாதையாக உள்ள ராம், தனக்கென ஓர் உறவு கிடைத்துவிட்டதாக நினைக்கிறான். ராணுவத்தில் உள்ளவர்கள் அவன் ரகசியமாக திருமணம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். அதையே கிசுகிசுப்பாக பேசிக்கொள்கிறார்கள்.
சீதா மகாலட்சுமி என்ற பெண்ணை தேடி கிளம்புகிறான். டெல்லிக்கு சென்று ரயிலில் வரும் பெண்ணைத் தேடுகிறான். அப்படியே தேடி அந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள பேலஸில் நடன ஆசிரியையாக இருப்பதை அறிகிறான். அங்கு சென்று அவளிடம் அவள் கடித த்தில் எழுதியது போலவே எழுதி காதலிக்கிறான். படத்தில் நாடக கலைஞராக வரும் வெண்ணிலா கிஷோர் வரும் காட்சிகளெல்லாம் சிரிக்க வைக்கிறார். படத்தின் பின்பகுதி சிக்கல்களுக்கான சற்று ப்ரீத்திங் ஸ்பேஸாக இக்காட்சிகள் உள்ளன.
துல்கர், மிருணாள் தாக்கூர் என இருவரும்தான் முக்கியமான நடிகர்கள். இவர்களின் வாழ்க்கை வழியாக அஃப்ரின் தன் வாழ்வுக்கான அடிப்படை உண்மையைக் கண்டறிகிறாள். அவள் இந்தியர்களை வெறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என அறிந்து கண்ணீர் சிந்துவதை காட்சியாகவே காட்டியிருக்கிறார்கள். வசனம் கூட அதிகம் இல்லை. இதுதான் படத்தின் சிறப்பு. வெறுப்பை விட மனிதநேயமே வாழும் என்பதற்காக ராம் தன்னையே தீக்குச்சியாக்குகிறான். அதில் தான் அஃப்ரினின் வாழ்க்கை ஒளி பெறுகிறது. இதை உணரும் நொடி, அஃப்ரின் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது.
இதற்கு ஹனுமந்த் ராகவபுடி அந்தால ராக்சஷி, லை, படி படி லேச்சே மனசு என சில படங்களை எடுத்தார். இவை அனைத்துமே வணிக ரீதியாக வெற்றி என்று கூற முடியாது. ஆனால் இவரின் பலமே மைய பாத்திரங்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், காதல் காட்சிகளும்தான். குறிப்பாக இவரின் படங்களில் விஷால் சந்திரசேகரின் இசை தனித்துவமாக ஒலிக்கிறது. இதற்கான காரணம் இவர்கள் இருவருக்கும் சிறப்பாக நிறைய விஷயங்கள் ஒத்திசைவாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக