கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!
ஜெய் சிரஞ்சீவா
சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி
தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.
படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.
தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்லை. அப்படியெனில் நாமும் கவலைப்படவேண்டாம் என்பதுதான் மறைபொருளாக சொல்லுகிறார்கள்.
சிரஞ்சீவியை இளமையானவராக காட்ட படத்தில் இரண்டு காட்சிகள் உண்டு. ஒன்று, அபார்ட்மென்டில் கீழ்தளத்தில் உட்கார்ந்து அனைவரையும் கலாய்க்கும் பெண்கள் கூட்டத்தில் ஒருபெண்ணை புட்டத்தில் தட்டி மோகனின் பெண்ணா நீ என கேட்பது, அடுத்து, சமீராவின் வீட்டை விபச்சாரம் செய்யும் இடம் என காசு கொடுத்து சமீராவை கட்டிப்பிடித்து கலாட்டா செய்வது.... இதெல்லாம் காமெடி என்ற பெயரில் நடக்கிறது. இதை தவிர்த்துவிட்டு மற்ற காட்சிகளைப் பார்த்தால் பரவாயில்லை என்று கூறலாம்.
சமீராவோடு ஒப்பிட்டால் பூமிகாவுக்கு ஒரேயொரு பீச் சாங் கவர்ச்சி பாடல் மட்டுமே. அவர் தான் சிரஞ்சீவி வில்லனை பழிவாங்க கல்யாணம் செய்து அவர் அமெரிக்கா வர உதவுகிறார். இவருடனான காட்சிகள் பரவாயில்லை ரகமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.
சமீரா, பூமிகா இருவருக்குமே மாமா போலத்தான் சிரஞ்சீவி இருக்கிறார். ஆனாலும் அவர் மீதுதான் அவர்களுக்கு காதல் வந்து தொலைக்கிறது. எனவே, காதல், குத்து, கிளாமர் குத்து, பீச் குத்து பாடல்கள் என நிறைய பார்க்க கேட்க வேண்டியிருக்கிறது. அனைத்திலும் சிரஞ்சீவி முயற்சி எடுத்து நடனமாடி மகிழ்விக்கிறார். சும்மாயில்லை. பிரம்மானந்தம் சிறிது நேரம்தான் வருகிறார். ஆனாலும் அவரை கனவு போல ஒரு சூழலைச் சொல்லி சீனு வைட்லா படம் போல தனி உலகில் வைத்திருக்கிறார்கள். அதுவு்ம் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.
கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!
Komalimedai Team
கருத்துகள்
கருத்துரையிடுக