உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள்!
உலகமெங்கும் மாறும் காலநிலை!
ஆண்டுதோறும் ஜப்பானின் ஒகினாவா நகரில், வசந்தகாலத்தின் போது செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும். பூக்கள் மெல்ல மலர்வது ஒகினாவாவில் தொடங்கி டோக்கியோ நகரம் வரை நீளும். அந்நாட்டில் மலர்ந்த பூக்களைக் காண்பதை ஹனாமி (Hanami festival)என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை செர்ரி பூக்கள் மலர்ந்து வந்தன.
ஆனால், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியே, ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரி பூக்கள் முழுமையாக மலர்ந்துவிட்டன. இப்படி பூக்கள் வேகமாக மலர, காலநிலை மாற்றமே காரணம். பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவது, உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். “சூழலின் இசைவு நிலைக்கு, காலம் முக்கியமான காரணி” என்றார் கென்யாவிலுள்ள ஐ.நா. சூழல் திட்டத்தைச் (UNEP) சேர்ந்த மார்டென் கப்பெல்லெ.
தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றின் சூழல் பங்களிப்பு பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பினாலஜி (Phenology) என்று பெயர். 1853ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தாவரவியலாளர் சார்லஸ் மோரென் (Charles morren), பினாலஜி என்ற வார்த்தையை முதன்முறையாக அறிமுகம் செய்தார். பின்னாளில் தாவரங்களின் வாழ்க்கை சார்ந்து நிறைய ஆவணப்படுத்தல்கள் நடைபெற்றன.
கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸிலுள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ரிச்சர்ட் பிரைமாக் (Richard Primack), ஆய்வொன்றைச் செய்தார். கான்கார்ட் நகரில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக பூக்கள் 7 நாட்களுக்கு முன்னரே மலர்வதைக் கண்டறிந்தார். இதுபோன்ற காலநிலை மாற்றங்களை அறிய தாவரவியலாளர்களின் தாவர வாழ்க்கை சுழற்சி ஆய்வுகள் உதவின. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான யுஎன்இபி ஆய்வறிக்கையில், 200கும் மேற்பட்ட தாவரங்கள், உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி நிகழ்ச்சிகள், பத்தாண்டுகளுக்கு 3 நாட்கள் என்ற ரீதியில் முன்னே நகர்ந்துள்ளது என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
மேற்கு நாடுகளில், ஓக் மரத்திலுள்ள புழுக்களைத் தின்று வாழ்கிறது ஐரோப்பிய ஈப்பிடிப்பான் (European pied flycatcher). வசந்த காலத்தில் ஓக் மரத்திலுள்ள புழுக்களை உண்பதோடு, தன் குஞ்சுகளுக்கும் உணவாக கொண்டு செல்கிறது. காலநிலை மாற்றத்தால் ஓக் மரத்திலுள்ள புழுக்கள் உற்பத்தியாவது குறைந்துவிட்டது. இதனால், ஈப்பிடிப்பானின் இனப்பெருக்க காலமே தாமதமாவதை சூழல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்படி உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி நிகழ்ச்சிகள் மாறுபடுவதற்கு, பினாலாஜிகல் மிஸ்மேட்சஸ் (Phenological mismatches)என்று பெயர்.
Missing the beat graham lawton
new scientist 25.6.2022
கருத்துகள்
கருத்துரையிடுக