குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்
மொழி எனும் தீராந்தி
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமா?
நேற்று அநதிமழை இதழ் படித்தேன். அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர். உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும், பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர். இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான். கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது.
நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன். அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள். பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன். லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது.
இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி. 30 பக்கங்களை படித்திருக்கிறேன். வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். நன்றி!
அன்பரசு
8.6.2022
மயிலாப்பூர்
----------------------------------------
குமுதத்தை
உயர்த்திய எஸ்ஏப
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
வீட்டில் உள்ள தங்களது பெற்றோரையும் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள். இன்று டேபிள் மின்விசிறி ஒன்று வாங்கினேன். ரூ.2600. அறையில் சீலிங் ஃபேன் வயதான கிழவன் போல இருமிக்கொண்டே சுற்றி வந்து உயிரை விட்டுவிட்டது. இதை ஓனரிடம் சொன்னால் நமது பணத்தில் அவர் அழைத்து வரும் எலக்ட்ரீசியன் பழுதுபார்ப்பார். அது ஒத்துவராது என தோன்றியது.
மாலையில் சுமாரான ஜங்ஷன் பாக்ஸ் ஒன்றை ரூ.350க்கு வாங்கினேன். பயன்படுத்தியபோது 5 நிமிடங்களுக்குள் பழுதாகிவிட்டது. அதில் மின்சாரம் வருவதை அறிவிக்கும் விளக்கு பிறகு எரியவே இல்லை. மின்சாரமும் வரவில்லை. தயாரித்த இடம் உத்தரப்பிரதேசம். தயாரித்த இடம் பற்றி முழு முகவரி கூட இல்லாமல் பொருள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை ஆட்கள் அதையும் வாங்கி திருப்தியானது சால்ஜாப்பு சொல்லி விற்கிறார்கள். இதில் மேட் இன் இந்தியா வாசகம் ஒரு கேடு.
குமுதம் எடிட்டர் எஸ்ஏபி பற்றி மின்னூல் ஒன்றை படித்துக்கொண்டு இருக்கிறேன். அவரின் இயல்பு, பத்திரிகை கொள்கைகள் என பல்வேறு விஷயங்களை நூலில் அவரின் உதவி ஆசிரியர்கள் பேசுகிறார்கள். ரா.கி. ரங்கராஜன், ஜா.ர. சுந்தரேசன், புனிதன் ஆகியோர் தங்களது பணி அனுபவங்களை பிரமாதமாக எழுதியிருக்கின்றனர். இப்போது நூலில் புனிதன் எழுதியிருப்பதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் வேலை பரவாயில்லையா? உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
நன்றி!
அன்பரசு
11.6.2022
மயிலாப்பூர்
கருத்துகள்
கருத்துரையிடுக