மனதைக் காப்பாற்றும் வாசிப்பும் எழுத்தும்! - கடிதங்கள் - கதிரவன்

 




21.3.2022

மயிலாப்பூர்

அன்புக்குரிய கதிரவனுக்கு, வணக்கம். 

எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் கால பணி செய்திகள் முடிவுக்கு வந்திருக்கும். சென்னையில் வெயில் தாக்கம் மெல்ல கூடி வருகிறது. எனது அறையில் அனல் வீசுகிறது. இரவு உறங்குவது கடினமாகி வருகிறது. காய்ச்சல் வந்தவரின உடல் போல வேர்த்துக் கொட்டுகிறது.ஏறிய வெப்பம் ஏறியதுதான்.  கடும் வெயில் நடுக்கும் குளிர் என இனி வாழ்க்கை நடக்கும். ஐஐடிஎம் பற்றிய செய்தி ஒன்று எழுதினேன். தாய் நாளிதழில் தாறுமாறு ஆபரேஷன் செய்ததில் செய்தி ஏதும் விளங்கவில்லை.  நான் எழுதிய அமைச்சர் பற்றிய ஒற்றைக் குறிப்பு, எடிட்டர் என்மீது கோபப்பட அத்தனை வாய்ப்புகளையும் தந்தது.  சந்தேகம் வந்தால் இனி எழுதாதே என்று சொல்லிவிட்டார். 

இந்த மாதம் நாளிதழ் வேலைகள் முடிந்தவுடன் ஊருக்குப் போக வேண்டும். பார்ப்போம் திட்டம் எந்தளவு சாத்தியமாகிறது என்று...தற்போதைக்கு எழுதுவதும், வாசிப்பதும், தேநீர் குடிப்பதும் பெரிய விடுதலையாக இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை சந்திக்காத புதிய மனிதர்களைச் சந்திப்பேன் என நினைக்கிறேன். 

பன்பட்டர்ஜாம் என்ற கட்டுரை நூலை எழுதிவருகிறேன். கோமாளியான சர்வாதிகாரி நாட்டு மக்களிடம் பேசும் வானொலி பேச்சு உரை பற்றியது. முடிந்தவரை நன்றாக எழுத முயன்று வருகிறேன். நன்றி!

அன்பரசு





-----------------------------------------------------------

27.3.2022

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

இந்த வாரம் ஈரோடு சென்றேன். அம்மாவுக்கு உடல்நலமில்லை. ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியாக இருந்தாள். பார்த்துவிட்டு வந்தேன். ஆறுதல் வார்த்தைகளை பெரிதாக நம்பவில்லை. அதை எனது வருகை அவளுக்கு கொடுக்கும். செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தேன்.  மூத்த சகோதரர் வந்து பார்த்துவிட்டு உடனே கோவைக்கு வண்டியேறிவிட்டாராம். பரபரப்பான நகர வாழ்க்கை யாரையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா எழுதிய நூலை படித்துவிட்டேன். டிஐ அரவிந்தனின் மொழிபெயர்ப்பு. நூல் தலித் கிறிஸ்தவர்கள், பிராமணர்கள் என இரு சாதிப்பிரிவினர்க்கு இடையிலான இசை உறவைப் பேசுகிறது. பாலக்காடு மணி அய்யர், பழனி சுப்பிரமணியம் பிள்ளை ஆகிய இருவரும் தான் நூலில் அதிகம் தென்படும் ஆளுமைகள். இசைவேளாளர் சுப்பிரமணியம் பிள்ளை சாதி காரணமாக ஒதுக்கப்பட்டார். மணி அய்யர் புகழ் இன்றும் இசையுலகில் உள்ளது. இசை பற்றிய முக்கியமான நூல் இது. 

வாசிப்பும் எழுத்தும் மட்டுமே மனதைக் காப்பாற்றி வருகிறது. உரையாடும் காந்தி - ஜெயமோகன் நூலைப் படித்தேன். அவரது வலைத்தளத்தில் கேட்ட காந்தி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். காந்தி பற்றி அறிந்துகொள்ள இது நல்ல நூல்தான். 

மெல்கிப்சன் நடித்த ரான்சம் படத்தை இன்று அதிகாலைதான் பார்த்தேன். குழந்தை கடத்தல் பற்றிய படம். நன்றாக எடுத்திருக்கிறார்கள். உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

அன்பரசு 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்