நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

 









26.11.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன். 

அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும். நன்றி! 

அன்பரசு










28.11.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

இந்த ஞாயிறு மிகவும் களைப்பாக இருந்தது. மழைநீரில் செருப்பு பிய்ந்துபோய்விட்டது. இன்று விகேசி பெல்ட் செப்பல் ஒன்றை வாங்கினேன். ஏ.ஆர் புட்வேர் என்ற கடையில் தான் செருப்புகளை வாங்கினேன். அறையின் அருகில் உள்ள பஜார் தெருவில் கடை உள்ளது. நான் சென்று செருப்பு வாங்கும்போது, ஒரு குடும்பம் உள்ளே நுழைந்து செருப்பை தேர்ந்தெடுக்கிறேன் என களேபரம் செய்தது. மனைவி கணவருக்கு ஏதொன்றையும் உருப்படியாக வாங்கத் தெரியாது என நம்பினார் போல. அனைத்து விஷயங்களையும் விலை உட்பட அவர்தான் தீர்மானித்தார்.

  மனைவியின் குரல் தான் கணவரை செயல்படவைக்கும் கிரியாஊக்கி. இவர்களின் களேபரத்தில் நான் வெளியே நின்று செருப்பை போட்டுப் பார்த்து காசு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். கடைக்காரர் ஜிஎஸ்டி பற்றி ஏதோ அலுப்பாக பேசிக்கொண்டிருந்தார். விலை குறைப்பு பற்றிய பேச்சு வந்தவுடன் கடைக்காரர் ஆக்ரோஷமாகிவிட்டார்.  ஆடை, காலணிகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக உயர்ந்துவிட்டிருந்தது. செய்தியில் படித்ததுதான். கடைக்காரரும் வரியை மோசமானது என்ற ரீதியில்தான் சொன்னார். நன்றி! 

அன்பரசு 


படங்கள் - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்