அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

 




6

3.10.2021

அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன. 

அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது. 

ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி படித்தேன். ஐந்து முறை முதல்வர் ஆனவர் தான் நவீன் பட்நாயக். அடுத்தமுறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளவர் இவர்தான். ஏராளமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். நன்றி!

அன்பரசு








7

17.10.2021

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். 

நலமா? இன்று மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது. சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் நனைந்துவிட்டேன். மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது.  அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது. இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன். மோசமான நிகழ்ச்சி. 40 கால மக்களின் வாழ்க்கை இரண்டு நாட்களில் முடிவுக்கு  வந்துவிட்டது. உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது. வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது. பலருக்கு மார்பிலும், வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் 101ஆவது இடம் கிடைத்துள்ளது.  பாக். இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான். பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல்வது? அங்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு, கேரளத்தில் வந்து வேலை செய்கிறார்கள். புத்திசாலித்தனம்தான். 

கார்ட்டூம் கதிரவனை அவரது வண்ணாரப்பேட்டை வீட்டுக்குச் சென்று பார்த்தேன். திருமணமானபிறகு அவரது மனைவி அகிலாவையும் இப்போதுதான் பார்க்கிறேன். அகிலா கணவருக்கும் சேர்த்து தடாலடியாக பேசுபவராக இருக்கிறார். அவர்களது மணவாழ்வு மகிழ்ச்சியாக செல்கிறது என நினைக்கிறேன். அரசுத்தேர்வுக்கு கதிரவன் முயன்று வருகிறார். நன்றி!

அன்பரசு 

pinterest

கருத்துகள்