லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!
லக் கீ
தென்கொரியா
தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை.
உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழுகிறான். அப்போதுதான் ஆண்டவன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறான். அதுவும் ஒரு கூலிக்கொலைகாரனின் வாழ்க்கை மூலமாக... அவனது பெயர், கார், வீடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். அதைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையை உருப்படி செய்துகொள்கிறான் என்று நினைத்தால் அப்படியேதும் கிடையாது,.வீட்டுக்குப் போகிறான். சோபாவில் படுத்து தூங்குகிறான். சிசிடிவி கேமராவில் ஒரு பெண்ணை காம வெறியோடு பார்க்கிறான். பிறகு அந்த வீட்டில் ரகசிய கிடைக்கும் பணத்தை வைத்து நன்றாக சோறு வாங்கி தின்கிறான்.
இந்த நேரத்தில் அரசு பொதுகுளியலறையில் சோப்பால் கால் வழுக்கி விழுந்து பின்மண்டையில் அடிபட்ட கூலி கொலைகாரர், சீ ஜூங்கின் அடையாளத்தில் வாழ்கிறார். தனது சிகிச்சைக்கான செலவைக் கூட 911 சிகிச்சை பணியாளர் பெண்ணிடமிருந்து வாங்கித் தரும் அவலமான நிலை. மெல்ல சீ ஜூங்காக தன்னை நினைத்துக் கொண்டு வாழ்கிறார். குப்பைத்தொட்டியை கலைத்து விட்டது போல கிடக்கும் வீட்டை ஒழுங்கு செய்கிறார். பிறகு, தனது திறமை என்ன என்று தேடுகிறார். அப்போதுதான், கத்தியை சிறப்பாக பயன்படுத்துவது தெரிகிறது. தன்னைப் பற்றி அறிந்துகொள்ள பக்கத்து அறைகளிலுள்ள மனிதர்களை விசாரிக்கிறார். அப்போது ஒருவன் கெட்ட வார்த்தை பேசியபடி தாக்க முயல, அவனை தற்காப்பு கலை கொண்டு வேகமாக அடித்து சாய்க்கிறார் கூலி கொலைகாரர்.
சீ ஜூங் மன விரக்தியுற்று தற்கொலைக்கு முயன்றிருப்பதை அறிந்து அந்த நிலையிலிருந்து மேலே வர நினைக்கிறார். இந்த நேரத்தில் மருத்துவசிகிச்சைக்கு உதவிய 900 டாலர்களை அடைக்க, அந்த பெண்ணின் தாயாரின் உணவகத்தில் வேலைக்கு் சேர்கிறார். அ்ங்கு கத்தியை சுழற்றி உணவுகளை கிராஃப்டாக மாற்றுகிறார். இதனால் அங்கு வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. வாடிக்கையாளர்களைப் பொறுத்து உணவில் அலங்காரம் செய்து கொடுத்து அசத்துகிறார் வூக். இந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை பணியாளரான பெண்ணுடன் மெல்ல காதல் மலர்கிறது.
கூடவே சீ ஜூங் தனது காலண்டரில் ஒரு தேதியை குறித்து வைத்திருக்கிறான். அங்கு வூக் செல்கிறார். அது டிவி சீரியலுக்கான படப்பிடிப்பு தேர்வு. அங்கு துக்கடா வேடத்தில் நடிக்க முயல்கிறார். அப்போது சீ ஜூங்கின் உண்மையான வீட்டு முகவரியை அடையாளம் காண்கிறார். அங்கு சென்று பார்த்தால், சீ ஜூங்கின் அப்பா அவன் பெரிய நடிகராக வருவான் என கனவு கொண்டு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதைப் பார்க்கும் வூக் நடிக்கும் கனவை தான் நிறைவேற்ற சபதம் எடுத்து தன்னை மெல்ல மெருகேற்றுகிறார். இதனால் டிவி சீரியல் இயக்குநர் இவர் மீது கவனம் செலுத்துமளவு அக்கறையாக நடிக்கிறார். இதற்கிடையில் சீ ஜூங், வூக்கின் வீட்டில் பாதுகாக்கப்படும் பெண் மீது காதல் கொள்கிறார். வேறுவழியில்லாத நிலையில் அந்த பெண்ணும் காதல் கொள்கிறார். வூக்கிற்கு தான் யார் என்பது நினைவுக்கு வந்ததா, அவர் தனது சினிமா, உணவக சமையல்காரர் வேலையைக் கைவிட்டாரா, சீ ஜூங் வூக் போல திறமையாக நடிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை. \\
படத்தில் வூக்காக நடித்துள்ளவர்தான் படம் நெடுக நகைச்சுவை, திறமையான சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தேர்ச்சி பெறுகிறார். வேறு நபர்களை விட இவர்தான் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார். படத்தை நீங்கள் பார்க்கும்போது இக்கருத்தையே சொல்லுவீர்கள்.
லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக