வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்
இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம்!
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமா?
சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது.. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது. ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது.
குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார். இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன். நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை. முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை. உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது.
எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன். ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று. ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும். இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன். அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன். கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு. கல்கத்தா நகரிலிருந்து பூர்ணியா என்ற காட்டுப்பகுதிக்கு செல்லும் இளைஞனின் கதை. கதையில் வரும் மஞ்சி, மடுக நாதன், யுகல் தாதுரி, குந்தா, கிரிதாரிலால் என மறக்கமுடியாத பாத்திரங்கள் உள்ளன. நூல் நெடுக இயற்கை பற்றிய விவரணை அற்புதம். தாவரம், பூ ஆகியவற்றை துல்லியமாக ஆசிரியர் விவரித்துள்ளார். காட்டுப்பகுதிகளை மக்களுக்கு வழங்கி விளைச்சல் நிலமாக மாற்றும் பணிக்கு சென்ற இளைஞனின் ஆறு ஆண்டு வாழ்க்கையே வனவாசி கதையாக மாறியிருக்கிறது. நன்றி!
அன்பரசு
16.6.2022
மயிலாப்பூர்
-----------------------------
வெளியில் வெயில் உள்ளே புழுக்கம்!
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலம்தானே?
குங்குமம் இதழை மூன்று வாரங்களாக வாங்கவில்லை. புதிதாக ஏதுமில்லையே என்ற உணர்வு தீவிரமாகிவிட்டதுதான் காரணம். எங்கள் நாளிதழில் இருந்து விலகலாம் என்று நினைத்து பணி விலகல் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் பொறுப்பாசிரியர் பணி விலகலை ஏற்கவில்லை. அலுவலக சூழலும் நச்சாக மாறிவிட்டது. இதில் வெளிநாட்டில் படித்து வந்து முதலாளியின் கட்டாய தடுப்பூசி நிர்ப்பந்தம் வேறு.
நாளிதழ் வேலைகளை ஒரு மாதத்திற்கு தயார் செய்து வைத்தாகிவிட்டது. இதன் காரணமாக நான் வெளியேறும் சூழல் வந்தாலும் கூட நாளிதழின் செயல்பாடு நிற்காது. பணிவிலகல் கடிதத்தைக் கொடுத்தபோது தடுப்பூசி வேண்டாம் என்று கூறுவது பற்றிய கடிதம் ஒன்றை எழுதி அனுப்பு என்றார். சித்த மருத்துவர் சொல்லுவதை அலோபதி மருத்துவர் அல்லது அந்த தரப்பில் வாதிடுபவர்கள் ஏற்கப்போவதில்லை. அப்புறம் என்ன?
வனவாசி நூலை படித்தது பற்றி கூறியிருந்தேன் அல்லவா? நூலை முன்னமே திருவண்ணாமலை புகைப்படக் கலைஞர் வினோத் அண்ணா வீட்டில் பார்த்தேன். நூலைப் பற்றி அண்ணா பெருமையாக சொன்னார். ஆனால் அப்போது அதை வாங்கவேண்டும் என்று தோன்றவில்லை. வனவாசி, இயற்கை பற்றிய அற்புதமான காட்சி ரீதியான அனுபவ தரிசனங்களைக் கொண்டது. புத்தகத் திருவிழாவில் நூலை வாங்கினேன். விலை ரூ.230.
நான் அலுவலகத்தில் பேசும் இரண்டு நபர்களில் ஒருவருக்கு விரைவில் பிறந்தநாள் வருகிறது. அதாவது, ஆகஸ்ட் மாதம். நான் வாங்கி படித்த நூல் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளேன்.
உங்கள் வேலைகள் எப்படி செல்கின்றன? செய்கிற வேலை ஓரளவுக்குத் திருப்தியாக உள்ளதா? ஈரோட்டில் மழைபெய்து வருகிறதென அம்மா சொன்னாள். சென்னையில் வெயிலால் வியர்வை மழைதான். இருமுறை அணியும் சட்டையை இப்போது ஒருமுறைதான் அணிய முடிகிறது.
அன்பரசு
18.6.2022
மயிலாப்பூர்
கருத்துகள்
கருத்துரையிடுக