விண்ணைத்தாண்டி சொந்த கிரகத்திற்கு பறக்க முயலும் பஸ் லைட் இயர்! - லைட்இயர் - டிஸ்னி பிக்ஸார்
லைட் இயர்
பிக்சார் -டிஸ்னி
வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஒத்த கிரகம் ஒன்றுக்கு ஆராய்ச்சி செய்ய ஸ்பேஸ் ரேஞ்சர்கள் வருகிறார்கள். அப்படி வந்து ஆராய்ச்சி செய்யும்போது, அங்கு உயிருள்ள ஜந்துகளை பிடித்து உண்ணும் மர விழுதுகள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவற்றிடமிருந்து தப்பிக்கும்போது விண்கலம் பாறையில் மோத அங்குள்ள பீடபூமி அமைப்பு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் கோளுக்கு மீண்டு சென்றார்களா இல்லையா என்பதே கதை.
பஸ் லைட் இயர் (செல்லப்பெயர் பஸ்) என்பவர்தான் இதில் ஸ்பேஸ் ரேஞ்சர்களில் ஒருவர். இவருக்கு ஆணைகளை வழங்கும் கமாண்டர் பெண்மணி ஒருவர் உண்டு. அவர் பெயர் அலிஷா. பஸ் செய்யும் தவறு காரணமாகவே விண்கலம் பீடபூமி அமைப்பில் மாட்டிக்கொள்கிறது. கூடவே விண்கலத்திற்கு ஆற்றல் தரும் கிரிஸ்டலும் உடைந்துபோய் விடுகிறது. இந்த எரிபொருள் இருந்தால்தான் அவர்களின் சொந்த கிரகத்திற்கு செல்ல முடியும். இதை அதே கிரகம் ஒன்றிலிருந்து அகழ்ந்து எடுத்து சோதித்து பிறகுதான் பயன்படுத்த முடியும். தங்களது சொந்த கிரகத்திற்கு செல்வதே பஸ் காலகட்ட வீரர்களுக்கு லட்சியம்.
பஸ் இப்படி சோதனை செய்ய செய்ய அவரது கமாண்டருக்கு - அலிஷாவுக்கு கல்யாணம் ஆகிறது பிள்ளை பிறக்கிறது. அப்பிள்ளை வளர்ந்து மணம் செய்கிறார். அவருக்கு பிள்ளை பிறக்கிறது. பஸ் விண்வெளியில் இருப்பதால் அதிக வயது ஆகவில்லை. ஆனால் கிரகத்தில் இருப்பவர்களுக்கு அது நெடிய காலம். எனவே வயதாகி மரணிக்கிறார்கள். பஸ் தனது திட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதே கதை.
படத்தில் வில்லன் என்பது எதிர்காலத்திலிருந்து வரும் ஒரு நபர்தான். அந்த நபர் யார் என்பது சஸ்பென்ஸ். அதை படம் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
படத்தில் காமெடிக்கு சாக்ஸ் என்ற பூனை உள்ளது. கூடவே பஸ்ஸின் ஜூனியர் டீமாக வரும் கமாண்டரின் பேத்தி, வயதான பாட்டி, உயிரைப் பற்றி கவலைப்படுபவர் என சிறப்பான பேக்கேஜ் இருக்கிறது. எனவே, சீரியசாக நடைபெறும் காட்சியில் கூட காமெடி சிறப்பாக வேலை செய்திருக்கிறது.
பிக்சாரின் பிரமாதமான கதை, உணர்வு, நெகிழ்ச்சிகள் இந்த படத்தில் குறைவு. அந்த இடத்தை முழுக்க ஒளிவேகத்தில் பயணிப்பது, அதற்கான முயற்சிகளே பிடித்துக்கொள்கின்றன. பஸ், தன்னை சிறைபடுத்தியவரிடம் எதிர்காலத்திற்கு போகவேண்டாம். இங்கிருக்கும் நண்பர்கள் அவர்களின் வாழ்க்கை அழிந்துவிடும். அது தவறு என கிரிஸ்டலை கொடுக்க மறுக்கும் இடம் தான் படத்தில் முக்கியமானது. அடுத்து, தவறுகள் செய்வது பற்றி தனது ஜூனியர் குழுவிடம் மனம் திறந்து பஸ் பேசும் காட்சி.
படத்தில் இதைத்தவிர உணர்வெழுச்சியான காட்சிகள் பெரிதாக இல்லை. மற்றவை அனைத்தும் ஆத்தா வையும் நான் வீட்டுக்குப் போகணும் என்கிற வகையறா காட்சிகள்தான். அங்குதான் படம் சற்று சறுக்குகிறது.
குழுவாக பணியாற்றுவது, குழு உறுப்பினர்களின் பங்களிப்பை பலவீனங்களுடன் ஏற்பது, கனவு என்பதை அனைவருக்குமான பங்களிப்புடன் சாத்தியப்படுத்துவது என நிறைய விஷயங்களை படம் கற்றுத்தருகிறது.
ஒளிவேக படம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக