வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

 











அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள். 

அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம். 

வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூலை வாசித்து வருகிறேன். இந்த நூலின் ஆசிரியரை நாளிதழில் எழுத வைக்க முயற்சி செய்யவேண்டும். 

நன்றி!

அன்பரசு 




--------------------------------------------------------------





அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். வணக்கம். நலமா? 

இன்று இந்தியா டுடே வார இதழை பீடிஎப்பாக படித்தேன். இதில் சசி தரூர் எழுதிய கட்டுரையை மட்டும் மொழிபெயர்த்து பிளாக்கில் பதிவிட்டுள்ளேன். இவர் மட்டுமல்லாது மணிஷ் திவாரி, சஞ்சய் ஜா, ஜெய்ராம் ரமேஷ் என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறப்பாக பேச, எழுதும் திறனைப் பெற்றவர்களாக உள்ளனர். 

மே 2, முதல் கட்டுரைகளை கணினியில் உள்ள மென்பொருளில் பதிவிட வேண்டும். ஃப்ரீலான்சர் எழுத்தாளர்கள் இன்னும் கட்டுரைகளை எழுதி அனுப்பவில்லை. 

மின்சாரப் பற்றாக்குறை பற்றி வெ.நீலகண்டன் ஆ.வியில் சிறப்பாக கட்டுரை எழுதியிருக்கிறார். உணவு பற்றிய ஆரோக்கியம் ஒரு பிளேட் என்ற விகடனில் வரும் தொடர் நன்றாக இருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண் தொடரை சிறப்பாக எழுதிவருகிறார். 

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் லாஸ்ட் டாக்ஸ் நூலை படித்து முடித்தேன். அறிவு, மூளை, மனது நான் என்ற தன்மை, கல்வி என பல்வேறு விஷயங்களை ஜே.கே நூல் முழுக்க கேள்விக்கு உட்படுத்தி பதில் காண வைக்கிறார். அதிகாரத்தை அடைய 48 வழிகள் என்ற நூலை போனிலேயே படித்தேன். நூலை நன்றாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். நன்றி!

அன்பரசு 

Image - Outlook




கருத்துகள்