இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா
அனெக்
ஆயுஷ்மான் குரானா
இயக்கம் - அனுபவ் சின்கா
பாடல்கள் -அனுராக் சைகியா
வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.
யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.
வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள் என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே, வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்கிறார்கள்.
வடகிழக்கு இந்தியாவில் சக்திவாய்ந்து உள்மாநில ஆயுதக்குழு, டைகர் செங்மாவினுடையது. இவர் மொத்த மாநிலங்களுக்கும் ஒரே ஆயுதக்குழுவாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறார். இந்த நேரத்தில் இந்திய அரசு டைகர் செங்மாவை பலவீனப்படுத்த பல்வேறு குழுக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து வளர்த்து விடுகிறது. இதனால் மொத்த மாநிலங்களிலும் தாக்குதல்கள் அதிகரிக்க நிம்மதி கெடுகிறது. இந்திய அரசைப் பொறுத்தவரை அமைதி என்பதை விட அமைதி ஒப்பந்தமே முக்கியமாக படுகிறது.
வடகிழக்கு இந்தியாவுக்கு இந்திய அரசு சார்பாக அனுப்பப்படும் அமன், அங்குள்ள ஜான்சன் என்பவரைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். இவரைக் கண்டுபிடித்தால் எளிதாக அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்துவிட முடியும் என நினைக்கிறது இந்திய அரசு. இதை சாத்தியப்படுத்தும் வழியில் தான் அமனுக்கு அவனது புனைப்பெயரான ஜோஸ்வா மூலம் அய்டோ என்ற குத்துச்சண்டைப் பெண்ணுடன் நட்பும் பின்னர் காதலும் கிடைக்கிறது. ஆனால், அமனுக்கு அதைத்தாண்டி அய்டோவின் அப்பா மீதுதான் கவனம் உள்ளது., அவர் ஏற்கெனவே டைகர் செங்மாவின் படையில் இருந்து பிறகு பிரிந்து ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதெல்லாம் வெளியேதான். உள்ளே அவர், ஜான்சன் என்பவருக்கு பினாமியாக அவரது பள்ளி, மறுவாழ்வு மையங்களை நெறிப்படுத்தி வருகிறார். அவருக்காகவே ஜோஸ்வா என்ற பெயரில் அய்டோவை காதலித்து அவளுக்கு நெருக்கமாகிறான்.
கடமையைச் செய்வதா, அங்குள்ள மக்களுக்கு உண்மையில் நல்லது செய்வதா என அமன் யோசிக்கும்போதுதான் படம் உண்மையில் கூர்மையான இடத்தை நோக்கி நகர்கிறது. டைகர் செங்மாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு கூட்டி வந்து அவரிடமிருந்து பிரிந்து சென்ற ஜான்சன் எப்படி அமைதி பேச்சுவார்த்தைக்கு எதிராக செயல்படுகிறார் என உளவுத்துறை தலைவர் தூண்டிவிட, வடகிழக்கு இந்தியா முழுக்க வன்முறை வெடிக்கிறது. டைகர் செங்மா தான் அங்கு பல்வேறு சட்டவிரோத வணிகங்களை செய்கிறார். அதில் பாதிக்கப்படும் இளைஞர்களை குழந்தைகளை ஜான்சன் தனது பள்ளி, மறுவாழ்வு மையம் மூலம் சீர்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.
அமனாக ஆயுஷ்மான் குரானா பணியைச் செய்வதா, உண்மையை புரிந்துகொண்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்வதாக தடுமாறும் இடத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரும் அவரது பீகார் நண்பரும் கஃபேயில் பேசும் வசனங்கள் பிரமாதமாக எழுதப்பட்டுள்ளன. பீகாரி நண்பர், அய்டோயவை ட்ராப் செய்யவேண்டாமே என்று சொல்ல கடமையின் அழுத்தத்தில் காதலைக் கூட மறைத்து அமன் அப்படி செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லுவார். அதற்கு முன்னர் பீகாரி நண்பரின் சாதி, மதம் ஆகியவற்றைக் கேட்கும் இடம் வரும். அதே வசனத்தை பின்னர் பீகாரி நண்பர் பேசுவார். அமன், தன்னை உளவுத்துறை நம்பாமல் போனை டேப் செய்யும்போது பீகாரி நண்பர் வாய்வழியாக அதே வசனம் வேறுமாதிரியான் கோணத்தில் வரும்.
படம் இரண்டு கிளைகதைகளைக் கொண்டது. ஒன்று, அமன் வடகிழக்கு இந்தியாவில் தனது அரசு சொன்னதை நடைமுறைப்படுத்தினாரா என்பது... அடுத்து அய்டோ எப்படி முன்முடிவுகளைக் கொண்ட பயிற்சியாளர்களை எதிர்த்து குத்துச்சண்டையில் போட்டியிட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாள் என்பதே இரண்டாவது கதை.
படத்தில் காதல் காட்சிகள் கிடையாது. அமன், அய்டோவை இருமுறை சற்று பாசத்துடன் அணைப்பது மட்டுமே தான் காட்சிகள். காதல் இருந்தால் அனுராக் சைக்கியா பிரமாதமாக பாடல்களை இசைத்திருப்பார்தான். ஆனால் படத்தின் பேசுபொருள் நிலத்தை தந்திரமாக ஆள நினைக்கும் அரசுகள், சதிகார ஆயுதக்குழுக்கள் ஆகியோரின் செயல்களைப் பேசுவது. எனவே, நிறைய விஷயங்களை காட்சியாக காட்டுவதும், அதை வைத்து நாயகன் பேசும் காட்சியாகவும் வேறு மாதிரியான இந்தியாவை கண்முன் பார்ப்பது போல இருக்கிறது.
கஃபேயில் வேலை செய்யும் எம்மாவின் மகனை மீட்க அமன் செல்லும் காட்சியும், அங்கு பார்க்கும் சிறைப்படுத்தப்பட்ட கைதிகளையும் பார்த்தால் கண்ணில் ரத்தமே கசியும். உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது என பீதியாகிறது.
அரசியலும், ராஜதந்திரங்களும் எப்படி சொர்க்கம் போன்ற மண்ணை கண்முன்னே சுடுகாடாக்கி மக்களை தவிக்க வைக்கிறது என்பதை படம் பார்க்கும்போதே உணர முடியும். எம்மாவின் மகனை எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று அமன் சொல்லி காப்பாற்ற முடியாதபோது அவனின் அம்மா, அழுகையோடு அரற்றிவிட்டு சாலையில் நடந்துசெல்லும் காட்சி உதாரணம்.
இறுதிக்காட்சியையும் அனுபவ் சின்கா சற்று பகடியோடு முடித்திருக்கிறார். அதாவது அய்டோ இந்தியாவுக்காக உலகளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று கொடியை கையில் தூக்கிப்பிடிப்பது... அப்போது அமன் சொல்லும் வசனம் முக்கியமானது. சிலர் எளிதாக இந்தியர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால் சிலர் தாங்கள் இந்தியர் என ஒவ்வொருமுறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது சார் என தனது உயரதிகாரியிடம் பேசுவார். அப்போது உயரதிகாரியும் கூட உளவுத்துறை பதவியிலிருந்து விலகி சாதாரண டெஸ்க் ஜாப்பிற்கு மாற்றப்பட்டிருப்பார். அமன், லீவில் இருப்பார்.
ஜெயித்தது யார்?
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக