நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

 










4.3.2022

மயிலாப்பூர்



அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது. 

எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக முயல்கிறார்கள்.  

பெயரை பிரசுரிப்பது முதலிலா, கடைசியிலா என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. இதைப்பற்றி நாளிதழின் செய்தி ஆசிரியர் முன்னதாகவே வசை பாடியிருக்கிறார். நான் அதைப்பற்றி ஏதும் கூறவில்லை. பெயர் போடுவதில் ஒரு பைசா பிரயோஜனமில்லை. மனதில் கசப்பும், வெறுப்பும் மிகுந்தால் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு வெறுப்பைக் கைக்கொள்ள வேண்டியதுதான். நல்ல நண்பர்களை வாழ்வில் பெறுவது வரம். அதிர்ஷ்டம் என்று கூட கூறலாம். எனக்கு அந்த வகையில் வறுமைதான். உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள் நண்பரே!

நன்றி!

அன்பரசு


கருத்துகள்