உடலைத் தாண்டி மூளைக்குள்ளும் செல்லும் வெப்பம்! - கடிதங்கள்- கதிரவன்

 












14.4.2022

மயிலாப்பூர்


அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? திருமண வேலைகளை நிறைவு செய்திருப்பீர்கள். நான் இன்று எனது அறைத்தோழர் மெய்யருள் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன். தினகரனில் வேலை செய்தபோது கே.கே.நகரில் அறையில் தங்க வைத்து உதவினார். ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாள் வேறு. இப்போது நாடெங்கும் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. 

தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை. அறையில் உட்கார்ந்து 2 அறிவியல் நேர்காணல்களை எழுதினேன். வெயில் உடல்சோர்வை எளிதாக உருவாக்கிவிடுகிறது. மதியம் கடும் வெக்கை. படுத்து தூங்கிவிட்டேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. பக்கத்து அறைவாசி, பட்டைசாதம் ஒரு பாக்கெட் கொடுத்தார். அதுவே மதியச்சோறு. பால் பொருட்கள் சேர்க்க கூடாது என சித்த மருத்துவர் ரெஜூநாத் முன்னரே எச்சரித்தார். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நான் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளேன். வேறுவழி தெரியவில்லை. 

அம்மா இன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்ததாக சொன்னாள். அவளது நம்பிக்கை அவளுக்கு உள்ளது. பயணம் மனதுக்கு ஆறுதல் தரும். சென்றவாரம் விகடனில் வந்த நீரதிகாரம் முன்கதை சுருக்கம் போல வந்துவிட்டது. கதை பெரிதாக நகரவில்லை. இந்த வாரம் இனிமேல்தான் படிக்கவேண்டும். 

இயற்கை தொடர்பான சில நூல்களை வாசிக்க வேண்டும். இதற்காக வலசை செல்லும் பறவைகள் நூலை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாரம் எழுத்தாளர் ஏ.சண்முகானந்தம் அவர்களை சந்திக்க நினைத்துள்ளேன். பார்ப்போம். உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். 

நன்றி!

அன்பரசு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்