கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்

 











30.11.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது. 

இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள்.  இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை.  நன்றி! 

அன்பரசு









2.11.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சளி பிடித்தது என நான் உணர்ந்த இரண்டாவது நாள் இருமல் தொடங்கிவிட்டது. இருமல் மருந்து வாங்கினேன். இன்று இரவு தொடங்கி அதை குறிப்பிட்ட இடைவேளையில் குடிக்க வேண்டும். எனது அறை அருகே புதிதாக வட இந்தியர்கள் வந்து குடியேறி இருக்கிறார்கள். காரணீஸ்வரர் கோவில் அருகே உள்ள சலூனில் வேலை செய்கிறார்கள். அனைருமே சிறிய பாதங்களைக் கொண்ட உயரம் குறைவானவர்கள், செருப்பை சைஸ் ஆறைத் தாண்டாது. கழிவறை, குளியலறை என இரண்டையும் ரயில்வே கழிவறை போலவே பாவிக்கிறார்கள். சிறுநீர் வந்தால் எது திறந்த கதவோ அதில் புகுந்து சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடுகிறார்கள். தண்ணீர் ஊற்றி அதை கழுவிவிடும் வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறார்கள். 

நான் பயன்படுத்தி வந்த லினக்ஸ் மடிக்கணினி பழுதாகிவிட்டது. சரிசெய்யவேண்டும். நான் பயன்படுத்தி வந்த பீஜியன் குக்கரும் கூட விசில் ஊதுவதில்லை. அதுவும் காலாவதியாகிவிட்டது. புதிய குக்கர் ஏதேனும் வாங்கவேண்டும். நன்றி!

அன்பரசு



 

கருத்துகள்