வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

 















12.7.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். 

வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன. 

ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது. 

அன்பரசு 



2

21.7.2021

மயிலை











அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தாலும் அதில் உங்களின் அன்பு வெளிப்படையாகவே தெரிந்தது. மிக்க நன்றி! 

என்னால் முடிந்தவரை கடிதங்களை எழுதி அனுப்புகிறேன். இதில் எழுதினேன், எழுதவில்லை என்பதை சாதனை அல்லது பெருமையாகவெல்லாம் நான் நினைக்கவில்லை. கருத்துகளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வளவுதான். சிக்னலைக் கடக்கும்போது, வண்டி வந்து மோதிவிட்டது. காலில் நல்ல அடி. அதாவது முழங்காலில்... நொண்டிக்கொண்டுதான் அலுவலகத்திற்கு செல்ல முடிந்தது. வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போனேன். அவர் மருந்தகத்தில் தேங்கிய பல்வேறு பொருட்களை என்னை வைத்து விற்க முயன்றார். எக்ஸ்ரே -1500, ஸ்கேன் - 3500 என வெட்டிச்செலவானது. இவற்றைப் பார்த்த மருத்துவர், எனக்கு காலில் அடிபட்டுள்ளது என்றார். 

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்த்திஸ்கேன் மையத்திற்கு ஆட்டோ பிடித்து சென்றேன். ஆட்டோவுக்கு காசு ரூ.100. அவர்களின் ஸ்கீம், இரிடியம் போலவே தெரிந்தது. இரவில் ஸ்கேன் எடுத்தால் 2500, மற்ற நேரங்களில் 3500 என வித்தியாசமான முறையைச் சொன்னார்கள். எனக்கு முழங்கால் வலியில் தலையின் இருபுறமும் எரிச்சல் மண்டியது. ஸ்கேன் எடுக்க வருபவர்களை ரிஷப்ஷன் பெண் நடத்தும் விதம் மோசமானது. இதில் வேறு ஸ்கேன் செய்யும் பெண் கூகுள் ரிவ்யூ வேறு கேட்டார்.  காசு கொடுத்து கொடூரமான அனுபவத்தைப் பெற்று வந்தேன். போகும்போது ஆட்டோவில் போய்விட்டு திரும்பி வரும்போது, காலை நொண்டிக்கொண்டு அறை வந்து சேர்ந்தேன். கால்வலி கடுகடுப்பதால் எதையும் வாசிக்க முடியவில்லை. இருப்பதிலேயே துயரமானது அதுதான்.  காலை நகர்த்தி வைப்பதே கடினமாக உள்ளது. 

அன்பரசு


Image - Pinterest






 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்