உண்மையா? உடான்ஸா? - டான்சில்ஸ் கட்டி, ஷூக்கள், ஒலிம்பிக், சூரிய ஒளி, ஹார்மோன், நாய்களின் முடி
ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்!
உண்மையல்ல. இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர்.
மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!
உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!
சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியான சதை வளர்ச்சியை, அறுவைசிகிச்சை செய்து கட்டுப்படுத்தலாம். ஆனால் இதனை நீக்கும்போது திசுக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படாதபோது மீண்டும் தொண்டைச்சதை வளரும் என ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை வலைத்தளம் தகவல் தெரிவிக்கிறது. தொண்டை கரகரப்பு தான் இதன் வெளித்தெரியும் அறிகுறி. இதற்கு சளி, ஒவ்வாமை, உலர்ந்த காற்று என வேறு காரணம் உள்ளதா என பார்க்கவேண்டும். இதன்மூலம் எளிதாக டான்சில்ஸ் பிரச்னை மீண்டும் வந்துள்ளதா என கண்டுபிடித்துவிடலாம்.
சூரிய ஒளி ஹார்மோன்களைப் பெருக்கும் !
உண்மை என மருத்துவ ஆய்வாளர் கார்மிட் லெவி சொல்லுகிறார். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் ஆண், பெண் என இரு பாலினத்தவரிடமும் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள். இதுபற்றிய ஆய்வு 2021இல் வெளியான செல் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதைவிட கூடுதல் நன்மையாக, வைட்டமின் டி கிடைக்க சூரிய ஒளி தேவை. எனவே, அதிகாலை சூரிய ஒளியில் மகிழ்ச்சியாக காயலாம்.
நாய்களின் முடி நிறம் தொன்மையானவை.
உண்மை. நாம் வளர்க்கும் நாய்களின் முடி நிறம், அதன் வடிவம் ஆகியவை அதன் மரபணு பொறுத்தவை. 2021ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, தொன்மையான ஐந்து வகை நிற வடிவங்களையே, இன்றுள்ள நாய்கள் கொண்டுள்ளன என கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் டனிகா பன்னாஸ்ச் கூறினார். இவை பரிணாம வளர்ச்சியால் உருவாகின்றன என்று அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
https://www.yahoo.com/lifestyle/50-weird-facts-everything-181406932.html
https://www.vam.ac.uk/blog/museum-life/getting-to-the-point-of-medieval-shoes
https://www.hopkinsallchildrens.org/Patients-Families/Health-Library/HealthDocNew/Can-Tonsils-Grow-Back
கருத்துகள்
கருத்துரையிடுக