வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

 

 

 

 

 

 

பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள்

தொகுப்பு - சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகம்

மின்னூல்



கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம்.

பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும்.

திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம்.

முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்ள இந்த இரு கதைகளில் டைகர் சற்று தீவிரத்தன்மை கொண்டது. காவல்நிலையம்தான் கதைக்களம். அங்கு காவலர்கள் போடும் பிஸ்கெட்டுகள், உணவு கூடுதலாக அரசியல் கைதிகளின் ரத்தம் ஆகியவற்றை உண்டு கொழுத்து வாழ்கிறது நாய். அதன் பெயர்தான் டைகர். அரசு சொல்லும் உத்தரவுக்கு உட்பட்டு காவல்துறையினர் பல்வேறு அரசியல் கைதிகளை பிடித்து நையப்புடைக்கிறார்கள், கை, கால்களை முறிக்கிறார்கள்.  அதை டைகர் என்ற நாய் மௌன சாட்சியாக பார்க்கிறது. தங்களுகான உணவு கொடுக்கப்படாமல் அதை காவலர்கள் தின்று மிச்சம் மீதியை டைகருக்கு போடுகிறார்கள். எனவே, கைதிகள் வாய்ப்பு கிடைக்கும்போது டைகரை அடிக்கிறார்கள். உதைக்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். நாய் என்ன செய்யும் கூப்பாடு போட்டு கூக்குரல் எழுப்ப, காவலர்கள் விரைந்து வந்து வலிக்கு காரணமான கைதிகளுக்கு மண்டகப்படி நடத்துகிறார்கள். கதை இப்படித்தான் செல்கிறது. கதையை வாசிக்கும்போது உள்ளார்ந்த வேதனை உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஜென்ம தினம் என்பது வறிய நிலையிலுள்ள எழுத்தாளனின் அவல வாழ்க்கை பற்றியது. இதில் அவன் சந்திக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், போலித்தனமான சில மனிதர்கள், பாசாங்கான அக்கறை கொண்டவர்கள் என நிறைய உணர்வுகளை எளிதாக கடத்த முடிகிறது பஷீரால்..... பிறந்தநாள் என்பதெல்லாம் பாக்கெட்டில் பணம் இருப்பவன், இருப்பவர்களால் கொண்டாடப்படுவது என்ற உணர்வு வாசிக்கு்ம்போது மனதிற்குள் தீவிரமாக எழுகிறது. அதிலும் கையில் பணம் இல்லாத சூழலில் எழுத்தாளன், பொருட்களை விற்கும் சிறுவர்களை ஏமாற்றுவதில்லை. ஆனால் எழுத்தாளன் கடன் கேட்க சென்ற நண்பர்களில் ஒருவன் செல்லாத பணத்தைக் கொடுத்து சிறுவர்களை ஏமாற்றுவதோடு அதை பெருமையாகவும் சொல்லுகிறான். அதேநேரம் சல்லித்தனமாக எழுத்தாளனிடம் நடந்துகொள்கிறான். பணம் வேண்டும் என கடன் கேட்டவனின் குறிப்பை பகிரங்கமாக படித்து பரிகாசம் செய்கிறான்.

ஆனைவால் என்ற சிறுகதை நேர்த்தியானது. இது குழந்தைகளுக்கான சிறுகதையின் இயல்பைக் கொண்டது. யானை வளர்க்கும் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சிறுவனின் கதையைப் பேசுகிறது. யானையின் வாலிலுள்ள முடியை எடுக்க அவன் என்னென்ன பிரயத்தனங்கள் செய்கிறான் என்பதை குறும்பான மொழியில் சிறுவனின் யோசிப்பு முறையில் எழுதியுள்ளார்.

சிங்கடி முங்கன் கதை, கடவுளை கூட சற்று பகடியான முறையில் கிண்டல் செய்யும் மையத்தைக் கொண்டது.  காரியாச்சன் என்பவன் சேரிப்பகுதியைச் சேர்ந்தவன். அவன், முஸ்லீம் தம்பதிகளுக்கு தனது கடவுளான சிங்கடி முங்கனின் பெருமையைச் சொல்லி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என நம்பிக்கை கொள்ளச் செல்கிறான். இதனால் அவனுக்கு அவர்களது வீட்டில் வயிறு முட்ட சாப்பிட உணவு கிடைக்கிறது. ஒரு இடத்தில் அவன் சாப்பிடும் உணவுகளை மட்டும் ஓட்டல் மெனு போல பஷீர் பட்டியலிட்டு, காரியாச்சன் இப்படி சாப்பாடு கிடைக்கிறதே நாம் இஸ்லாமுக்கு மாறிவிடலாமா என யோசிப்பதாக அங்கதம் செய்கிறார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் போதும், அது கல்லாக இருந்தால் என்ன, மரமாக இருந்தால் என்ன அனைத்துமே ஒன்றுதான் அதுதான் கடவுள் பிறக்கும் வழி. அதைத்தான் தனது கதை வழியாக பகடியான முறையில் சொல்லியிருக்கிறார் பஷீர்.



கோமாளிமேடை டீம்

நன்றி இரா.முருகானந்தம்












கருத்துகள்

பிரபலமான இடுகைகள்