பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள உதவிய எழுத்தாளர்களின் கருத்துகள்! - கடிதம் - கதிரவன்

 













30.10.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல். தி.நகரில் நல்ல கூட்டம். சூப்பர் மார்க்கெட்டிலும் கூட மக்கள் திரள் அதிகம். இன்று குங்குமம் வார இதழில் தலைமை உதவி ஆசிரியர் த.சக்திவேலைப் பார்த்தேன். வடபழனியிலுள்ள அவரது அறையில் சந்தித்தோம். ஸ்குயிட் கேம் 2 எபிசோடுகளைப் பார்த்தோம். கொரிய இயக்குநர் வெப் தொடரை உளவியல் புரிதலோடு நன்றாகவே எடுத்திருக்கிறார்.  வன்முறை அதிகம் என்பதால் பலரும் பார்க்கத் தயங்கலாம். சக்தி சாருக்கு அலுவலகத்தில் புதிதாக ஹெச்பி கணினி வாங்கித் தந்திருப்பதாக சொன்னார். கடந்த இருவாரங்களாக சனிக்கிழமை மட்டும் கூடுதலாக விடுமுறை எடுத்துவிட்டேன். ஆபீஸ் சென்று மோசமான மனிதர்களை சந்திப்பதே சலிப்பூட்டுகிறது. ஏதாவது படிக்க நினைத்தேன். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது முக்கியம் அல்லவா?

எங்களது நாளிதழ் எட்டாம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். முதல் வாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்.  இந்த முறை எனக்கு பக்கம் கூடியிருக்கிறது. எனவே, வேலைச்சுமையும் கூடுதல்தான். ஒவ்வாமை பற்றிய நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். 2021க்குள் முடிந்துவிடும் என நினைக்கிறேன். நன்றி!

அன்பரசு










4


4.11.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள். நான் இன்றுதான் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன். சீரியசான பிரச்னை தான்; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது. நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள். நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது. 

இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார். துணிச்சலான முயற்சி. தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம். இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார்.  அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர். சிறப்பிதழ் நன்றாகவே இருந்தது. 

தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது. துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை. நாளை அலுவலக வேலை உள்ளது. உடுத்திச்செல்ல துணி வேண்டுமே?  8ஆம் தேதி நாளிதழ் தொடங்கும் என நினைக்கிறேன். ஒரு வாரத்திற்கு கட்டுரைகள் பேக் அப் இருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களுக்கு கட்டுரைகளை தயாரிக்கவேண்டும். வெகு நாட்களுக்குப் பிறகு குங்குமம் வார இதழின் ஆராய்ச்சியாள நிருபரான பேராச்சி கண்ணன் சாரோடு போனில் பேசினேன். மகிழ்ச்சி. நன்றி!

அன்பரசு


 


கருத்துகள்