பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

 











பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்! 


இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். 

பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ரெபக்கா சாங். 

எரிமலையால் உருவாகும் குழாய் வடிவ அமைப்பிற்கு ஹவாய் தீவில் பாஹோஹோ (Pahoehoe) என்று பெயர். எரிமலை லாவா குழம்பால் உருவாகும் குழாய் அமைப்பு, ஆற்றில் உள்ள நீர் கடும் குளிரால் உறைவதை ஒத்த இயல்பைக் கொண்டது. இந்த அமைப்பில் ஹவாய் தீவைச் சேர்ந்த ஓஹீயா லெகுவா (Ohia lehua) என்ற மரத்தின் வேர்கள் துளைத்து வளருகின்றன. இதன் கீழ்தான் பல்வேறு கணுக்காலி உயிரினங்கள் வாழ்கின்றன. பிளைண்ட் வோல்ஃப் ஸ்பைடர், அசாசின் பக், ட்ராபிகல் கிரிக்கெட் பூச்சி ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர். 4 ஆண்டுகள் செய்த ஆராய்ச்சியில்தான், ஹவாய் தீவில் இருந்த ஏராளமான அரிய உயிரினங்கள் அழிந்துள்ளதை அறிந்தனர். புதிய உயிரினங்களைக் கண்டறிய ஹவாய் தீவிலுள்ள ஐந்து பழமையான எரிமலைகளை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.  மனிதர்களின் செயல்பாடு, பூஞ்சைத்தொற்று (Rapid Ohia Death), காலநிலை மாற்றம் ஆகியவை குகைகளில் வாழும் அரிய உயிரினங்களை மெல்ல அழித்து வருகின்றன. 


Geographical

Living lava tubes august 2022


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்