புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்
22.12.2021
மயிலாப்பூர்
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமா?
ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர். பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி!
அன்பரசு
27.12.2021
மயிலாப்பூர்
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
முஸ்லீம் வாசிப்பு வட்டத்திற்கு சென்ற பாதிப்பு இப்போதும் உள்ளது. அவர்கள் இணையக் கூறிய வாட்ஸ்அப் வட்டத்தில் நான் இணையவில்லை. அன்வர் என்பவரின் எண்ணையும் போனில் பிளாக் செய்துவிட்டேன். குறிப்பிட்ட மதத்தினரின் முன்னேற்றக் கதைகளை நான் கேட்டு என்னாகப்போகிறது? நகுலன் சிறுகதைகளை வடபழனி மோகன் அண்ணாவுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கினேன். மீதமுள்ள நூல்களை ஆழ்வார்பேட்டை கிளை நூலகத்திற்கு கொடுத்துவிட தீர்மானித்துள்ளேன். பூர்வீக வீட்டிலுள்ள நூல்களையும் அருகிலுள்ள நூலகத்திற்கு வழங்கிவிட்டால் எனது தோளில் உள்ள பாரம் குறைந்துவிடும்.
அலுவலகத்தில் மோகன்தாஸ் என்ற கணித பக்க உதவி ஆசிரியர் மட்டுமே பேச்சுத்துணை. நிதானமாக யோசிப்பவர். நான் பேசும் பல விஷயங்களை மறந்துவிடும் அனுகூலம் கொண்டவர். சேர்ந்து டீ குடிக்க சென்று வருகிறேன்.
பொதுவாக வெளியில் போகும் என்னிடம் மனநலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மணி கேட்பார்கள். அப்படி அல்லாதபோது முகவரி கேட்பார்கள். இப்போது என்னோடு வரும் மோகன்தாஸிடமும் இப்படி கேள்வி கேட்டு வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் வண்டியை ஏற்றம் ஒன்றில் தள்ளிவிடசொன்னார். அடுத்து வண்டியை யூடர்ன் போட்டுவிட சொன்னார். டென்ஷனாகிவிட்டார் மோகன்தாஸ். எனது சகவாசம்தான் இதற்கு காரணம் என சொன்னதும் சிரித்துவிட்டார். மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. விசித்திரம்தான். நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக