சதியின் இறுதி முடிவு - கடிதங்கள் - கதிரவன்
தின்பண்ட நிர்பந்தம்!
அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
இன்றும் நான் அலுவலகம் சென்றேன். சற்று ரிலாக்சாக வேலை செய்ய சனிக்கிழமை உதவுகிறது. ஆனால் என்ன நான் வாங்கும் சில தின்பண்டங்களை டெய்லி கதிர் செக்யூரிட்டிகளிடம் பகிர்ந்து சாப்பிடும் நிர்பந்தம் உள்ளது. அவ்வளவுதான். வரும் வாரத்தில் தொடங்கும் நாளிதழ் வேலைகள் மெல்ல சுணங்குவது போல தோன்றுகிறது. எழுதும் ஆட்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.
நானே எழுதினால் அதுவெறும் செய்திக்கட்டுரை என்கிறார்கள். பிறகு என்னதான் செய்வது என்றால் நம்மைப் பார்த்து கையை விரிக்கிறார்கள். பிழைப்பு இப்படித்தான் ஓடுகிறது. வேர்ட் ஆப் ஹானர் என்ற வெப் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மாண்டரின் மொழி தொடர். எம்எக்ஸ் பிளேயரின் தமிழ்மொழிபெயர்ப்பு. தொன்மையான தற்காப்புக்கலை வல்லுநர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை பல்வேறு தனி மனிதர்கள், தற்காப்புக்கலை மடங்கள் அடைய ஆசைப்படுகின்றன. அதை அடைந்தால் அவர்கள்தான் சீன நாட்டையே ஆளும் சக்தி பெறுவார்கள். ஆயுதக்கிடங்கை அடையும் பேராசை மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.
அமிஷ் எழுதிய வாயுபுத்திரர் வாக்கு என்ற நூலை 150 பக்கங்கள் படித்திருக்கிறேன். மொத்த பக்கங்கள் 600. நன்மை, தீமை பற்றிய தத்துவ விளக்கத்தை நூலில் சிறப்பாக எழுதி வாசிப்பவர்கள் யோசித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறார் ஆசிரியர். இதை யோசித்து தர்க்கரீதியாக வடிவம் கொடுத்து கூறிய முறை நன்றாக உள்ளது. இன்று ஆதவன் நாளிதழைச் சேர்ந்த வெங்கடசாமி போன் செய்தார். எப்போதும் போல, எமர்ஜென்சி என்றவுடன் என்னுடைய நிதிச்சேவை நினைவுக்கு வந்ததாம். போன் செய்து பணம் கேட்டார். அவர் அப்படியேதான் இருக்கிறார். நான் என்னால் பணம் கடன் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். அழைப்பை துண்டித்து விட்டேன்.
அன்பரசு
30.5.2022
மயிலாப்பூர்
-------------------------
கண்ணீர் வரவைத்த போர்க்கள காட்சி!
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
டாக்டர் இதழின் பொறுப்பாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் என இதழின் இம்பிரிண்டில் பெயர் பார்த்தேன். அவருக்கு போன் வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நேற்று அதாவது ஜூன் 4.எனது ஆசான் திரு. கேஎன் சிவராமன் சாருக்கு பிறந்தநாள். ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததேன். இனிமேல் குங்குமம் வார இதழை வாங்கப் போவதில்லை. இதுவரை அதை வாங்கியது போதும் என்று தோன்றுகிறது. தற்போது ஆனந்த விகடன் மட்டுமே வாங்கி வருகிறேன்.
சிவா முத்தொகுதியில் வாயு புத்திர ர் வாக்கு நூலை அறையின் மேலுள்ள மொட்டைமாடியில் அமர்ந்து வாசித்தேன். சிவன், பார்வதி ஆகியோரைப் பற்றிய மறுபுனைவு நூல்தான் இது. ஆசிரியர் அமிஷ் திரிபாதி நூலை சிறப்பாக ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். அதிலும் சதி இறக்கும் போர்க்கள காட்சி வாசிக்கும்போது கண்ணீர் பெருக வைத்துவிட்டது. ஆயுத தாக்குதலை, ஆயுதங்களை கையாள்வதை இந்தளவு நம்பகத் தன்மையுடன் விளக்க முடியுமா என ஆச்சரியப்படுத்துகிறார் அமிஷ். போனில் பிடிஎஃப்பாக படித்தேன். 632 பக்கங்கள். வாசிக்க அலுப்பு தட்டாத நூல். ராமச்சந்திரா முத்தொகுதியில் இறுதி நூலையும் அமிஷ் எழுதிவிட்டார். இலங்கைப் போர் என்பதே தலைப்பு. அதையும் பின்னாளில் வாசிப்பேன் என நம்புகிறேன்.
மடிக்கணினி இயங்குவது இன்று மழை வரும் என சென்னை வானிலை மையம் கணிப்பது போலத்தான் உள்ளது. கணினியில் பாதி வரை எழுதிய மின் நூலொன்று உள்ளது. அதை பெற முடியுமா என்றும் தெரியவில்லை. தங்கள் உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள்.
அன்பரசு
5.6.2022
மயிலாப்பூர்
Pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக